200 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி கோயில்கள் செய்த மேல்முறையீடு வழக்கை நில நிர்வாக ஆணையர் 3 மாதங்களில் முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுமார் 200 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி, ஸ்ரீபெரும்புதூர் பாப்பான் சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தமிழக நில நிர்வாக ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  காஞ்சிபுரம் பாப்பான் சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமாக இருங்கோட்டை மற்றும் பழஞ்சூர் கிராமங்களில் 200 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 1884ம் ஆண்டு உயில் மூலம் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட இந்த நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரியும், நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கக் கோரியும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 அந்த மனுவில், கோயிலுக்கு வழங்கப்பட்ட இந்த நிலம், அனாதீன நிலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வருவாய் ஆவணங்களில் அதை மாற்றி கோயில் பெயருக்கு பட்டா வழங்கக் கோரி கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், கோயிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை முடிந்து விட்டதால் அந்த நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை நான்கு வாரங்களில் மீட்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நிதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது என்றார்.

 இதையடுத்து, கோயில் நிலத்தின் உரிமை தொடர்பாக அரசுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்னை தொடர்பான  மேல் முறையீடு நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளதால், இது சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. கோயில் நிர்வாகத்தின் மேல் முறையீட்டு மனுவை 3 மாதங்களில் நில நிர்வாக ஆணையர் முடித்துவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories:

More