4 வார சிறைக்கு பிறகு ஷாரூக்கான் மகன் ஜாமீனில் விடுதலை

மும்பை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக்கானின் மகன்  ஆர்யன் கான், 4 வார சிறைவாசத்துக்கு பிறகு நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.    மும்பை  அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் விருந்து நடத்தியதாக குற்றம்சாட்டி  பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கானை கடந்த 3ம் தேதி தேசிய  போதை பொருள் தடுப்புத் துறையினர் (என்சிபி) கைது செய்தனர். இந்த சம்பவம்  தொடர்பாக மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் கீழ் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டதால், மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதில், நேற்று முன்தினம் ஆர்யன் கானுக்கும்,் அவருடன் கைது செய்யப்பட்ட மாடல் அழகி முன்மும் தமேச்சா, யன் கானின்  நண்பர் அர்பஸ் மெர்ச்சண்டுக்கும் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இவர்கள் அனுமதியின்றி நாட்டை விட்டு  வெளியேறக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் போன்ற 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் நீதிமன்ற நடைமுறைகளை பூர்த்தி செய்வதில்  தாமதம் ஏற்பட்டதால், ஆர்யன் கான் விடுதலையாகவில்லை.

நேற்று அனைத்து சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்யப்பட்டதால், நேற்று காலை 11 மணியளவில் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து ஆர்யன் கான் விடுதலை  செய்யப்பட்டார். சிறைக்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான  ஷாருக்கானின் ரசிகர்கள், மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளித்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். அர்பாஸ் மெர்ச்சண்டும், முன்மும் தமேச்சாவும் நேற்று மாலை சிறையில் இருந்து  விடுதலையாகினர்.

Related Stories: