×

வாடிகனில் கட்டித் தழுவி வரவேற்பு போப்பாண்டவருடன் பிரதமர் மோடி பேச்சு: இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு

வாடிகன் சிட்டி: ஜி-20 மற்றும் கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி, இங்கிலாந்து நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். முதல் கட்டமாக இத்தாலி சென்றுள்ள அவர், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நகரமான வாடிகன் சிட்டியில், கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிசை சந்தித்து பேசினார். கடந்த 2013ல் பிரான்சிஸ் போப் ஆண்டவராக பதவியேற்ற பிறகு அவரை சந்திக்கும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். இதற்காக வாடிகன் திருச்சபைக்கு சென்ற மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமருடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் சென்றனர். பிரதமர் மோடியை போப் பிரான்சிஸ் கட்டித் தழுவி வரவேற்றார். பின்னர், இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பருவநிலை மாற்றம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகள் மூலம் உலகை மேம்படுத்துதல், கொரோனாவிலிருந்து மீளுதல், அமைதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா கூறி உள்ளார். இந்த சந்திப்பின் போது, போப்பாண்டவரை இந்தியா வர வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும், இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்ததாக மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். முன்னதாக, நேற்று முன்தினம் இத்தாலி வாழ் இந்தியர்களுடன் பேசினார்.

மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் பரிசு
போப்பாண்டவரை சந்தித்த மோடி, அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, வெள்ளியால் செய்யப்பட்ட சிறப்பு மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்டை பரிசளித்தார். அத்துடன், பருவநிலை மாற்றத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், யுக்திகள், எட்டப்பட்ட இலக்குகளை விவரிக்கும் புத்தகத்தையும் பரிசளித்தார். பதிலுக்கு போப்பாண்டவர், கடந்த 2019 அபுதாபியில் போப்பாண்டவர், அல் அசார் கிராண்ட் இமாம் இருவரும் கையெழுத்திட்ட சகோதரத்துவ நல்லிணக்க ஒப்பந்தத்தின் வெண்கல நினைவுத் தகட்டை பரிசளித்தார்.

தொடங்கியது ஜி-20
போப்பாண்டவர் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, நேற்று தொடங்கிய ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, பிரதமர் மோடியை ஆரத்தழுவி மாநாட்டிற்கு வரவேற்றார். இன்று வரை 2 நாள் நடக்கும் இம்மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.

வாடிகன் சென்ற 5வது பிரதமர்
* இந்திய பிரதமர்களில் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் ஆகியோர் மட்டுமே வாடிகன் சென்று அப்போதைய போப்களை சந்தித்துள்ளனர். 5வது இந்திய பிரதமராக பிரதமர் மோடி வாடிகன் சென்று போப்பாண்டவரை சந்தித்துள்ளார்.
* கடந்த 1964ம் ஆண்டு போப் பால் 5, முதல் முறையாக இந்தியப் பயணம் மேற்கொண்டார். அதன்பின், 1986ல் போப் ஜான் பால் 2, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் மீண்டும் 1999ல் இந்தியா வந்தார்.

திட்டமிட்டது 20 நிமிடம் நடந்தது ஒரு மணி நேரம்
பிரதமர் மோடி - போப்பாண்டவர் இடையேயான சந்திப்பு 20 நிமிடங்கள் நடக்கும் என வாடிகன் நிர்வாகம் நிகழ்ச்சி நிரல் தயாரித்திருந்தது. ஆனால், முதல் சந்திப்பிலேயே ஆரத்தழுவி அன்பைப் பொழிந்த பிரதமர் மோடியுடன் போப்பாண்டவர், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆவலுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் இருவரின் சந்திப்பு, ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

கோவா தேர்தலுக்கு வைக்கும் குறியா?
கோவாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு பாஜ ஆட்சியை தக்க வைக்க, பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவர்களின் ஓட்டு அவசியம் தேவை. இதை குறிவைத்து தான் பிரதமர் மோடி, வாடிகன் சென்று போப் பிரான்சிசை சந்தித்திருப்பதாக எதிர்க்கட்சி தரப்பினர் கூறி வருகின்றனர். மோடியின் அதிகாரப்பூர்வ இத்தாலி பயண நிகழ்ச்சி நிரலில், போப்பாண்டவர் உடனான சந்திப்பு முதலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Modi ,Pope ,Vatican ,India , Vatican, welcome, pope, Prime Minister Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...