அடாத மழையிலும் விடாது நடந்த எட்டயபுரம் ஆட்டுச்சந்தை

எட்டயபுரம்: எட்டயபுரத்தில் விடிய விடிய பெய்த மழையிலும் நனைந்து கொண்டே வியாபாரிகள் ஆடுகள் விற்பனையில் ஈடுபட்டனர். எட்டயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுசந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும். செம்மறி ஆடு, வெள்ளாடு என 5 கிலோ குட்டியிலிருந்து சுமார் 40 கிலோ எடை வரை அனைத்து வகையிலும் ஆடுகள் விற்பனைக்கு வருவதால் நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கு இங்கு வருவார்கள். அதேபோல் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வியாபாரம் அதிக அளவில் நடைபெறும்.

கொரோனா காலகட்டத்தில் சந்தை மூடப்பட்டது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இருந்தபோதிலும் வேறுவழியின்றி மழையில் நனைந்து கொண்டே வியாபாரத்தில் ஈடுபட்டனர். பண்டிகை காலங்களில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும் நிலையில் மழையின் காரணமாக இந்த வருட தீபாவளி விற்பனை மந்தமாகவே இருந்தது.

Related Stories: