×

அடைமழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணி முடக்கம்: ஆலை உற்பத்தியாளர்கள் கவலை

சிவகாசி: அடைமழையால் சிவகாசியில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பணிகள் அனைத்தும் முடக்கியுள்ளன.  இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. 24 மணிநேரமும் சிவகாசியில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு பேக்கிங் நடைபெற்று வருகின்றன. வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 60 சதவீத பட்டாசு ஆலைகளில் ஏற்கனவே உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. வெளிமாவட்ட தேவைகளுக்காக 40 சதவீத பட்டாசு ஆலைகளில் இறுதிக்கட்ட உற்பத்தி பணிகள் நடைபெற்று வந்தன.

கடந்த ஒருவார காலமாக தொடர் சாரல் மழையால் மேலும் சில பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், சிவகாசியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 2 மணி முதலே அடைமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் உற்பத்தி பணிகள் முற்றிலும் முடங்கி விட்டன. இதுகுறித்து பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘முன்னணி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டன. சிறிய பட்டாசு ஆலைகளில் பினிசிங் பணிகள் நடைபெற்று வந்தன. மருந்து கலவை, மருந்து செலுத்துதல், காய வைத்தல், பேப்பர் சுற்றுதல், பேக்கிங் என ஒரு பட்டாசு முழுமை பெற நான்கு நாட்கள் வரை ஆகும்.

தற்போது பெய்து வரும் மழையால் இனி தீபாவளி பட்டாசு உற்பத்திக்கு சாத்தியம் இல்லை. பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளில் உள்ள தற்போதைய இருப்பு மட்டுமே இந்த தீபாவளியை பூர்த்தி செய்யும். எனவே இன்னும் 2 நாட்களில் பட்டாசுக்கு கடுமையான டிமாண்ட் ஏற்பட்டு விலை உயரும். தீபாவளி முடிந்த பிறகுதான் கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு பட்டாசு உற்பத்தி பணி நடைபெறும்’ என்றார்.

Tags : Fireworks production in Sivakasi halted due to heavy rains: Plant manufacturers worried
× RELATED தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று...