புதுச்சேரி இரட்டைக் கொலை வழக்கு; போலீசார் அதிரடி சோதனை; 10 ரவுடிகள் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் இரட்டைக் கொலை தொடர்பாக வானரப்பேட்டையில் ரவுடிகளை பிடிக்க வீடு வீடாக 2 மணி நேரம் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரவுடிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட ரவுடிகளிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வானரப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி பாம்ரவி, அந்தோணி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் ரவுடிகள் துணையோடு தமிழக கூலிப்படையினர் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. ரவுடிகளை பிடிக்க வானரப்பேட்டை, தாவீதுப்பேட்டை, ராசு உடையார் தோட்டம், காளியம்மன் தோப்பு, திப்புராயன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு சோதனை நடைபெற்றது.

4 எஸ்.பி. முன்னிலையில் 8 இன்ஸ்பெக்ட்டர்கள், 16 சப்இன்ஸ்பெக்ட்டர்கள் மற்றும் 100 போலீசார், 4 குழுக்களாக பிரிந்து வீடு வீடாக சென்று ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே பிரபல ரவுடி பாம்ரவி கொலை வழக்கில் புதிய திருப்பமாக காஞ்சிபுரம் கூலிப்படைக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் பணம் அனுப்பி உதவியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவரையும் இந்த வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கில் ரவுடி வினோத்தின் கூட்டாளிகள் 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories: