ஜம்மு - காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ சோதனை: ஒரு வாரத்தில் 25 தீவிரவாதிகள் கைது

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் என்ஐஏ நடத்திய சோதனையில் கடந்த ஒரு வாரத்தில் 25 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஜம்மு - காஷ்மீரின் மூன்று மாவட்டங்களை சேர்ந்த 8 இடங்களில் நேற்று முதல் தொடர் சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த அமீர் அகமது கோஜ்ரி, சத்தாத் அமீன் ஆகிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘ஜம்மு - காஷ்மீர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்ற லஷ்கர்-இ-தொய்பா (லெட்), ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஎம்), ஹிஸ்ப்-உல்-முஜாஹிதீன் (எச்எம்), அல் பதார் ஆகிய அமைப்புகளின் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்தன.

இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தோம். இந்த வழக்கில் இதுவரை 23 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், மின்னணு சாதனங்கள், ஜிஹாதி ஆவணங்கள், சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டன. கடந்த வாரத்திற்கு முன்னதாக 6 மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 98 தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்’ என்றன.

Related Stories: