தீபாவளி வசூலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.18 லட்சம் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு அரசின் 14 துறைகளின் 33 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி வசூலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. கணக்கில் வராத பணம், ரூ.6.47 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.36,000 மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மின்வாரியம், போக்குவரத்து, பத்திரப்பதிவு துறை, தீயணைப்பு துறை, வணிகவரி துறை, காவல்துறை, நில சீரமைப்புத்துறை உணவு வழங்கல் துறை உள்ளிட்ட 14 துறைகளில் 33 அலுவலகங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.18.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.6.47 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.36,000 மதிப்பிலான பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.18.20 லட்சம் பணம், மதுபாட்டில்கள், பட்டாசுகள் பறிமுதல் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள 14 துறைகளின் உயர் அதிகாரிகளுக்கும் இதுதொடர்பான அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அனுப்பப்பட உள்ளது. அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: