தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தை களை கட்டியது

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் ஊராட்சி சார்பாக வாரத்தின் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். சமயபுரம் ஆட்டுச்சந்தைக்கு நிகராக நடத்தப்படும் சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த ஆட்டுச் சந்தை களை கட்டியது. சாதாரணமாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆடுகள் வரை ஏலத்திற்கு வரும். சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் தொடர்மழை காரணமாக நேற்று பெரம்பலூர் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கு குறைவான ஆடுகளே ஏலத்திற்கு வந்திருந்தன.

இருந்தும் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை ஏலமெடுக்க காரைக்குடி, மதுரை, சிவகங்கை, சேலம், அரியலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலில் இருந்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு வந்திருந்தனர். ஆடுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஏலம் எடுக்கப்பட்டன. காலையிலிருந்து மழை பெய்ய தொடங்கியதால் கிராம மக்கள் விற்பனைக்காக ஆடுகளை அதிகம் கொண்டு வராததால் வியாபாரிகள் சற்று ஏமாற்றத்துடனும் சென்றனர்.

Related Stories:

More