×

பாடந்துறை கிராமத்தில் 2 வது நாளாக வீடுகளை இடித்து மக்னா யானை அட்டகாசம்

கூடலூர்: கூடலூர் வனப்குதியில் யானை, கரடி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்த வெளியேறிய 2 யானைகள் தேவர்சோலை பேரூராட்சியில் பாடந்துறை கிராமத்திற்குட்பட்ட மூச்சுகண்டி பகுதியில் வசிக்கும் சுகுமாறன் என்பவரது வீட்டை இடித்து உணவு தேடியுள்ளது. மேலும் வீட்டின் சமையலறை பகுதியில் கதவை உடைத்து பொருட்களை இழுத்து வீசி அரிசி பருப்பு உள்ளிட்ட தானியங்களை எடுத்து சாப்பிட்டு உள்ளது.

வீட்டில் இருந்த சுகுமாரன் குடும்பத்தினர் தனி அறையில் புகுந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை விரட்டி உள்ளனர். நேற்றும் 2வது நாளாக பாடந்துறை பகுதியில் இந்த 2 யானைகளும் வீடுகளை உடைத்து உள்ளன.

அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை சாப்பிட்டு பழகிய இந்த மக்னா யானைகள் இரண்டும் கடந்த பல வருட காலமாக தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை சுற்றுவட்டார கிராமங்களிலும், புளியம்பாறை, கோழிக்கொல்லி, முண்டக்குன்னு, நாடுகாணி, தேவாலா அட்டி, வாளவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதுவரை 30க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

கடந்த இரு மாதங்களுக்கு முன் தேவாலா அட்டி பகுதியில் தொடர்ச்சியாக வீடுகளை உடைத்து அரிசி, தானியங்களை சாப்பிட்ட இந்த யானைகளை விரட்ட கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அவை தமிழக கேரள எல்லைப் பகுதியான குண்டம் புழா வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. தொடர்ந்து இந்த யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில், யானைகளை கண்காணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதையடுத்து அவை மீண்டும் ஊருக்குள் புகுந்துள்ளன.
தற்போது பாடந்துறை சுற்றுவட்ட கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்த துவங்கியுள்ளன. இந்த யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடலூரை அடுத்த மூச்சு கண்டி பகுதியில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுயானை தாக்கி சேதம் அடைந்த சுகுமாரன் என்பவரது வீட்டை நேற்று மாலை கூடலூர் ஆர்டிஓ சரவணகண்ணன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Tags : Magna Elephant ,Panadura , Elephant
× RELATED பொள்ளாச்சி அருகே வில்லோனி வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழப்பு