பெ.நா. பாளையம் மேம்பால பணிகள் 5 கி.மீ. தூரத்தை கடக்க1 மணி நேரம்...! போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி

கோவை: கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கி.மீ. நீளத்துக்கு சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாமல் உள்ளது.  தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாமல் உள்ளதால் சர்வீஸ் சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.

இதனால் சாலையின் நடுவே 2 அடி ஆழம் வரை பள்ளங்களும் உருவாகியுள்ளன. மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சுமார் 5 கி.மீ. தூரத்தை கடக்க 1 மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. மழை நேரங்களில் சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து வாகனங்கள்  விபத்தில் சிக்குகின்றன. மாற்று வழிகளில் போதுமான சாலை வசதிகள் இல்லை. அறிவிப்பு பலகைகளும் இல்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

Related Stories: