மதுரையில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம் அமையும் இடத்தை பார்வையிட்டார் முதல்வர்

மதுரை: மதுரையில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைய உள்ள பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். முத்தமிழறிஞர், முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மதுரையில் சுமார் 2 லட்சம் சதுர அடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதனைத்தொடர்ந்து கலைஞர் நினைவு நூலகம் மதுரையில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.06 ஏக்கர் நிலத்தில், 2 லட்சத்து 22 ஆயிரத்து 815 சதுர அடி கட்டிட பரப்பளவில் நவீன வசதிகளுடன் நூலகம் அமைக்கப்படவுள்ளது.

இந்த நூலகம் அமைக்க தமிழக முதல்வர் அக். 14ம் தேதி முகப்புத்தோற்றம், வரைபடங்களுக்கு ஒப்புதல் அளித்தார். இப்பணிக்கான விரிவான மதிப்பீடு ரூ.99 கோடியில் தயார் செய்யப்பட்டு, நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாக ஒப்புதல் பெற்றப்பின் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு கட்டுமான பணி துவக்கப்படவுள்ளது. இந்நிலையில், தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவு நூலகம் அமையவுள்ள புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை வளாகத்தை பார்வையிட்டார்.

நூலகம் எவ்வாறு அமைக்கப்படவுள்ளது, அதில் உள்ள வசதிகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்து முதல்வரிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கி கூறினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் ராஜன், அர.சக்கரபாணி, கீதாஜீவன், ராஜகண்ணப்பன், மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்எல்ஏக்கள் தளபதி, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று அஞ்சலி

தேவர் குருபூஜையை முன்னிட்டு,  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர்  நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவது வழக்கம்.  இவ்வாண்டு தேவர் குருபூஜை விழா இன்று நடக்கிறது. இன்று காலை 7.45 மணியளவில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து தெப்பக்குளத்தில் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் முதல்வர், அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் மதுரை வந்து, பகல் 1.30 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சிறுவனை உற்சாகப்படுத்திய முதல்வர்

கலைஞர் நூலகம் அமையும் இடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து விட்டு, அங்கு கூடி இருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து, வணங்கினார். பொதுமக்களும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். கூட்டத்தில் இருந்த 8 வயது சிறுவன், முதல்வரைப் பார்த்து கையசைத்தான்.

இதைக்கண்ட முதல்வர், அந்த சிறுவனின் அருகில் வந்து தோளில் தட்டிக் கொடுத்து ‘‘உனது பெயர் என்ன? என்ன படிக்கிறாய்?’’ என்று வாஞ்சையோடு கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன், ‘‘எனது பெயர் முத்து கார்த்திக். மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்’’ என்றவன், ‘‘உங்களிடம் கைகொடுக்க ஆசையாக இருக்கிறது. கை கொடுக்கிறீர்களா?’’ என்றான். இதைக்கண்ட முதல்வர், ‘‘கட்டாயமாக’’ என்றபடி, அந்த சிறுவனின் கைகளைப் பற்றி, கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிறுவனும் மிகுந்த உற்சாகம் அடைந்தான்.

Related Stories:

More