×

உலக பக்கவாத நோய் தினம் விழிப்புணர்வு பேரணி பக்கவாதத்தால் இறப்பவர்கள்தான் உலகளவில் 2ம் இடத்தில் உள்ளனர்: ராயப்பேட்டை இயக்குநர் மணி தகவல்

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சார்பில் நேற்று உலக பக்கவாத நோய் தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக அளவில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுவதில் மாரடைப்புக்கு முதலிடமும்,   பக்கவாதத்துக்க 2ம் இடமும் உள்ளது என்று ராயப்பேட்டை மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மணி கூறினார். உலகில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ம் தேதி பக்கவாத நோய்  தடுப்புக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பான சிகிச்சை உட்படுத்துதல் ஆகிய  நோக்கத்தில் அனுசரிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நேற்று ராயப்பேட்டை அரசு  மருத்துவமனையில் இயக்குநர் டாக்டர் மணி தலைமையில்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மருத்துவ நிலைய அதிகாரி  ஆனந்த பிரதாப், டாக்டர்கள் சண்முகசுந்தரம், ேஹமந்தகுமார், சேக் சுலைமான் மீரான், ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர்  இயக்குர் டாக்டர் மணி நிருபர்களிடம் கூறுகையில்: பக்கவாதம் என்பது, மூளையின் ரத்தக் குழாய்களில் திடீரென்று அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு ரத்தம் செல்வது  தடைப்பட்டு ரத்தக்குழாய் வெடிப்பினால் ரத்தக்கசிவு  ஏற்பட்டு ஒரு பகுதியிலோ அல்லது முழுமையாகவோ ஏற்படும் மூளை செயல்  இழப்பாகும். பக்கவாதம் ஒரு மருத்துவ அவசர காலநிலை, இயலாமை  மற்றும் இறப்பிற்கும் ஒரு மிகப்பெரிய காரணமாக விளங்குகிறது. உலக  அளவிலான உயிரிழப்புகளில் மாரடைப்பு முதலிடத்திலும், பக்கவாதம் 2ம் இடத்திலும் உள்ளது. 55 வயதுக்கு மேல் 5 பெண்களில் ஒருவருக்கும் 6 ஆண்களில்  ஒருவருக்கும் வாழ்நாள் ஆபத்தாக இருக்கிறது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாக  சுமார் ஒரு லட்சம் பேரில் 105 முதல் 152 பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாதம் ஏற்படக்கூடிய மேற்கூறிய அறிகுறிகள் எவையேனும் தோன்றினால் 3 மணி  நேரத்திலிருந்து நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றடைய வேண்டும். ஏனெனில் ஒரு நிமிடத்தில் மூளையில் உள்ள  இரண்டு மில்லியன் செல்கள் இறந்து விடுகின்றன. காலதாமத்தினால் மூளையில்  நிரந்தர பாதிப்பு, இயலாமை மற்றும் உயிரிழப்புக்கான ஆபத்து அதிகரிக்கும்  நிலை உள்ளது.மேலும்  பக்கவாதம் வராமல் இருக்க வேண்டுமானால் பக்கவாத சிகிச்சைக்கு பிறகு மது,  புகைப்பழக்கம் இருக்கக் கூடாது என்றார்.

Tags : World Stroke Day Awareness Rally ,Rayapettai ,Mani , World Stroke Day, Awareness, Rayapettai Director, mani
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை