×

நவம்பரில் சிறப்பு முகாம் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை போலி வாக்காளரை ஒழிக்க ஆதார் எண்ணை வாக்காளர் ஐடி கார்டுடன் இணைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில், நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்திய தேர்தல் ஆணையம், 01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 01.11.2021 (நாளை மறுதினம்) வெளியிடப்படுகிறது. 1.11.2021 முதல் 30.11.2021 வரை புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்தவர்களின் மனுக்கள் மீது 20.12.2021 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியுள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து 5.1.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வருகிற 1ம் தேதி (திங்கள்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது மற்றும் நவம்பர் மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் சிறப்பு முகாம் குறித்து அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன் (திமுக), பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் (அதிமுக), தாமோதரன், நவாஸ்கான் (காங்கிரஸ்), கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் (பாஜ), பத்ரி, ராஜசேகரன் (மார்க்சிய கம்யூனிஸ்ட்), வீரபாண்டியன், ஏழுமலை (இந்திய கம்யூனிஸ்ட்), தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமபஜ், திரிணாமுல் காங்கிரஸ் என 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு அரசியல் கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் எந்த தேதி வரை வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பதை சொல்ல வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

அந்த தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தாமோதரன் (காங்கிரஸ்): வாக்காளர் பட்டியலில் போலிகளை ஒழிக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். கரு.நாகராஜன் (பாஜ): தமிழகத்தில் வர இருக்கிற நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல், அதற்காக மாநில தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்போகிறதா? அல்லது தமிழக தலைமை தேர்தல் ஆணையம் கொடுக்கும் வாக்காளர்  பட்டியலை வைத்து அவர்கள் தேர்தல் நடத்தப்போகிறார்களா? என்று கேட்டபோது  அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

பத்ரி (மார்க்சிய கம்யூனிஸ்ட்): ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல்  திருத்தம் என்பதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். நவம்பர் மாதம் தமிழகத்தில் பண்டிகை காலம்,  வடகிழக்கு பருவ மழை காலம். அதனால் 4 நாட்கள் சிறப்பு முகாமை, 6 நாளாக  அதிகப்படுத்த வேண்டும். வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): வாக்குச்சாவடிகளை அதிகரிக்க வேண்டும். சிறப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டும் இல்லாமல் சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கிற கட்சிகளையும் அழைக்க வேண்டும்.

பார்த்தசாரதி (தேமுதிக): வாக்காளர் பட்டியலில் அதிகப்படியாக குளறுபடி ஏற்படுகின்ற காரணத்தினால் ஆதார் எண்ணை அதில் இணைக்க வேண்டும். அனைத்துக்கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளோம். இதேபோல மேலும், கலைவாணன் (திரிணாமுல் காங்கிரஸ்), ராஜேஷ்கண்ணா (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Election Commission , Special Camp, Election Commission, Consultation, Aadhar Number, All Party Meeting,
× RELATED தேர்தல் தொடர்பான நோட்டீஸ்,...