×

5 நாள் பயணம் இத்தாலி சென்றார் மோடி: வாடிகனில் போப்பாண்டவருடன் இன்று சந்திப்பு

புதுடெல்லி: ஜி-20 உச்சி மாநாடு  மற்றும் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பங்கேற்க 5 நாள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி இத்தாலி சென்றடைந்தார். இன்று அவர் வாடிகனில் போப்பாண்டவர் பிரான்சிசை சந்தித்து பேச உள்ளார். ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் இன்றும் நாளையும் நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை உச்சி மாநாடு (சிஓபி-26) வரும் நவம்பர் 1, 2ம் தேதிகளில் நடக்கிறது. இவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி, தனது 5 நாள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார். அங்கு நேற்று ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய கமிஷன் தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், ஐரோப்பிய கூட்டமைப்புடனான பொருளாதார ஒத்துழைப்பையும், மக்களிடையேயான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக டிவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா 100 கோடி டோஸ் இலக்கை எட்டியதற்காக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் பிரதமர் மோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று வாடிகனில் கத்தோலிக்க தலைவரான போப்பாண்டவரை இன்று காலை சந்தித்து பேசுகிறார். போப்பாண்டவரை மோடி சந்திப்பது இதுவே முதல்முறை.

அதோடு 2 நாள் ஜி20 மாநாட்டிலும் மோடி இன்று பங்கேற்கிறார். இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட தலைவர்கள் நேரிலும், சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலமும் உரையாற்ற உள்ளனர். மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.



Tags : Modi ,Italy ,Pope ,Vatican , Travel, Italy, Modi, Pope, meeting
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...