ஜாமீன் உத்தரவை வழங்குவதில் தாமதம் மேலும் ஒருநாளை சிறையில் கழித்த ஷாருக்கான் மகன்

மும்பை: போதை பொருள் வழக்கில் ஜாமீன் அளிக்கப்பட்ட போதிலும், ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் ேநற்றும் விடுதலையாகவில்லை. கடந்த 3ம் தேதி சொகுசு கப்பலில் நடந்த போதை பொருள் விருந்தில் தொடர்பாக ஆர்யன் கான் உட்பட 20 பேர் தேசிய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 3 வாரங்கள் சிறையில் இருந்த அவருக்கும், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்மும் தமேச்சாவுக்கும் நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  பாஸ்போர்ட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை சீர்குலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்க கூடாது.

எந்த ஊடகத்திலும் கருத்துக்களை வெளியிடக் கூடாது, சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேசிய போதை பொருள் தடுப்பு துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட 14 நிபந்தனைகளின் பேரில் இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஆர்தர் ரோடு சிறையில் நேற்று மாலை 5.30 மணிக்குள் சில நடைமுறை சிக்கல்களால் ஆர்யான் கான் வழக்கறிஞர்களால் தாக்கல் செய்ய முடியாமல் போனது.

இதனால், நேற்று அவர் விடுதலை செய்யப்படவில்லை. மேலும் ஒருநாள் அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மகனை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக குடும்பத்துடன் சிறைச்சாலைக்கு சென்ற ஷாருக்கான் ஏமாற்றத்துடன் திரும்பினார். சட்ட நடைமுறைகள் முடிந்து, ஆர்யான்கான் இன்று விடுதலையாவார் என தெரிகிறது.

Related Stories: