×

ஐஆர்சிடிசி.யின் 50% சேவை கட்டணத்தை கேட்கும் முடிவு வாபஸ்: பங்கு சந்தை வீழ்ச்சியால் ரயில்வே முடிவு

புதுடெல்லி: ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்ததால், 50% சேவை கட்டணத்தை பங்கிடும் உத்தரவை ரயில்வே துறை திரும்ப பெற்றது. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் லாபத்துடன் இயங்கும் ஒரு முக்கியமான நிறுவனம் ஐஆர்சிடிசி. இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி நிறுவனம் நாடு முழுவதற்குமான ரயில் டிக்கெட் முன்பதிவை கையாண்டு வருகிறது. இதற்காக வசூலிக்கும் சேவைக் கட்டண வருவாயில் 50 சதவீத பங்கை நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றிய அரசுக்கு அளிக்க ரயில்வே துறை உத்தரவிட்டது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் அதிகளவிலான வருமானத்தை ஐஆர்சிடிசி நிறுவனம் இழக்க நேரிடும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், 825 ரூபாயில் இருந்து 976 ரூபாய் வரையில் உயர்ந்து வந்த ஒரு பங்கின் விலை, ரயில்வே துறை அறிவிப்புக்குப் பின்பு 650 ரூபாய் வரை சரிந்தது. பங்கு விலை தொடர்ந்து சரிந்து வந்ததால் ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் சேவை கட்டணம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக முதலீடு மற்றும் பொதுசொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துகின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சகம் தற்போது முடிவை மாற்றி கொண்டுள்ள நிலையில், ஐஆர்சிடிசி பங்கு விலை மீண்டும் ஏற்றம் காண அதிக வாய்ப்புகள் இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : IRCTC , IRCTC, Service Charge, Stock Market, Railways
× RELATED ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு...