×

வங்கதேசத்துக்கு எதிராக 3 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

ஷார்ஜா: வங்கதேச அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்களாக கிறிஸ் கேல், எவின் லூயிஸ் களமிறங்கினர். லூயிஸ் 6 ரன் எடுத்து முஸ்டாபிசுர் வேகத்தில் முஷ்பிகுர் வசம் பிடிபட்டார். கேல் 4 ரன் மட்டுமே எடுத்து மெகதி ஹசன் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, வெஸ்ட் இண்டீஸ் 18 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. ஹெட்மயர் (9 ரன்), ஆந்த்ரே ரஸ்ஸல் (0) அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியது நெருக்கடியை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில் ரோஸ்டன் சேஸ் - நிகோலஸ் பூரன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்து கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர். அதிரடியாக விளையாடிய பூரன் 40 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), சேஸ் 39 ரன் (46 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஷோரிபுல் இஸ்லாம் வீசிய 19வது ஓவரில் வெளியேறினர். டுவைன் பிராவோ 1 ரன் மட்டுமே எடுத்து முஸ்டாபிசுர் வேகத்தில் சவும்ய சர்கார் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் ஹோல்டர் 2 சிக்சர் தூக்கி அசத்த, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. முதல் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ், கடைசி 10 ஓவரில் 94 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச பந்துவீச்சில் மெகதி ஹசன், முஸ்டாபிசுர், ஷோரிபுல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஷாகிப் ஹசன் 9, முகமது நயிம் 17 ரன் எடுத்து வெளியேறினர். சவும்ய சர்கார் 17, முஷ்பிகுர் ரகிம் 8 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, வங்கதேசம் 90 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. ஆட்டம் வெஸ்ட் இண்டீசுக்கு சாதகமாகத் திரும்பிய நிலையில், லிட்டன் தாஸ் - கேப்டன் மகமதுல்லா இணைந்து 5வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடினர். இதனால் வங்கதேச அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. கை வசம் 6 விக்கெட் இருக்க, கடைசி 2 ஓவரில் 22 ரன் தேவைப்பட்டது.

19வது ஓவரின் கடைசி பந்தில் லிட்டன் தாஸ் (44 ரன், 43 பந்து, 4 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார். 6 பந்தில் 13 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில், கடைசி ஓவரை ரஸ்ஸல் வீசினார். பதற்றத்துடன் செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பியதுடன், ஒரு கேட்ச் வாய்ப்பையும் வீணடிக்க... கடைசி பந்தில் வங்கதேச வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. ஆனால், கேப்டன் மகமதுல்லாவால் அந்த பந்தில் ஒரு ரன் கூட எடுக்கமுடியவில்லை. வங்கதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து, 3 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது.

மகமதுல்லா 31 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), அபிப் உசேன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ராம்பால், ஹோல்டர், ரஸ்ஸல், அகீல், பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். த்ரில் வெற்றியை வசப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. பூரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Tags : West Indies ,Bangladesh , Bangladesh, cricket, run, West Indies, win
× RELATED சில்லி பாயின்ட்…