×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கனகராஜின் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்தது ஏன்?: அண்ணன் தனபாலிடம் போலீசார் விசாரணை

ஊட்டி: கொடநாடு  கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜின் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்தது ஏன்? என கனகராஜின் அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவரும், ஜெயலலிதாவின்  முன்னாள் கார் டிரைவருமான கனகராஜ் சாலை விபத்தில் மரணமடைந்தார்.இந்த  விபத்து வழக்கையும் போலீசார் மீண்டும் விசாரிக்க தொடங்கினர். அது தொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ்  ஆகியோரிடம் விசாரணை நடந்தது. விசாரணையின்போது அவர்கள் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் சாட்சியங்களை கலைத்ததும், தடயங்களை அழித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து கூடலூர்  சிறையில் அடைத்தனர். வழக்கு தொடர்பாக 2 பேரிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்ததால் 2 பேரையும் காவலில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி தனிப்படை போலீசார் முதலில் தனபாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். அதன்படி தனபாலிடம் 5 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தனபாலை காவலில் எடுத்த போலீசார் அவரிடம் விசாரணையை தொடங்கினர். ரகசிய இடத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின்போது கொலை, கொள்ளை  சம்பவம் நடந்த பின்னர் கனகராஜ் என்ன பேசினார்? ஆவணங்கள் ஏதேனும்  கொடுத்தாரா? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கனகராஜின் செல்போனில் தொடநாடு சம்பவம் தொடர்பான சில ஆதாரங்கள், உரையாடல்கள் இருந்துள்ளது.

ஆனால் போலீசார் அந்த செல்போனை கைப்பற்றி சோதனையிட்டபோது அவை அழிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அவற்றை செல்போனில் இருந்து அழித்தது ஏன்? அவற்றை யாரும் அழித்துவிடுமாறு கூறினார்களா? அல்லது மிரட்டினார்களா? கொடநாடு சம்பவம் தொடர்பான தகவல்களை விசாரணையின்போது தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? அந்த செல்போனில் முக்கிய  நபர்கள் செல்போன் எண்கள் ஏதேனும் இருந்ததா? என்பது குறித்து தனபாலிடம் போலீசார் துருவி துருவி விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் கேள்விகளின் அடிப்படையில் தனபால் பல்வேறு தகவல்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில் பல முக்கிய  நபர்கள் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கனகராஜின் உறவினருக்கும் 5 நாட்கள் போலீஸ் காவல்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான கனகராஜின் உறவினர் ரமேஷையும் நேற்று ஊட்டி கோர்ட்டில் தனிப்படை போலீசார்  ஆஜர்படுத்தினர்.
அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள  வேண்டும் என கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி மற்றும் குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபாவிடம் அனுமதி கேட்டு மனு செய்தனர். ஆனால் நீதிபதி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள  அனுமதியளித்தார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ரமேஷை காவலில் விசாரிக்க அழைத்து சென்றனர்.

விசாரணை நவ.26ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு  கொலை மற்றும் கொள்ளை வழக்கு கடந்த 1ம் தேதி  ஊட்டி மாவட்ட  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த இரு மாதங்களாக  மேற்கொண்ட விசாரணை  அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் அளித்தனர். இந்த நிலையில்  நேற்று மீண்டும் இவ்வழக்கு  விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் சயான், வாளையார்  மனோஜ் மற்றும் உதயகுமார்  ஆகியோர் ஆஜராகினர். சாட்சிகளிடம் விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்று அரசு வக்கீல் கோரியதால்,  வழக்கு விசாரணை  வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.



Tags : Kodanadu ,Kanagaraj ,Tanapal , Kodanadu murder and robbery case Why the evidence on Kanagaraj's cell phone was destroyed ?: Police investigation into brother Tanapal
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...