×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள  ‘அண்ணாத்த’ திடைப்படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களிலும், வலைத்தளங்களிலும்  வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சன்  பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம்  தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் 3 ஆயிரம்  தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி  சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலரை யூடியூப்பில் உலகம்  முழுவதும் சுமார் 84 லட்சம் பேர் பார்த்துள்ளனர். படத்தின் பாடல்களுக்கு  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஆவலுடன்  எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணைய  தளங்களிலும், வலைத்தளங்களிலும் வெளியிட தடை கோரி சென்னை உயர்  நீதிமன்றத்தில் சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்  வழக்கு தொடர்ந்துள்ளது.

 சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் சார்பில் வக்கீல் எம்.ஜோதிபாசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சன்  டிவி நெட்வொர்க்கின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு, இணை  தயாரிப்பு, திரைப்படங்கள் வெளியிடுதல் போன்ற பணிகளை செய்துவருகிறது.  பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் சன்  டிவி நெட்வொர்க் தயாரிப்பில் வெளிவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு  மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஏற்கனவே, சன் பிக்சர்ஸ் பல திரைப்படங்களை  தயாரித்துள்ளது. காஞ்சனா, இங்க என்ன சொல்லுது, குட்டி புலி, வெடி,  மங்காத்தா, சர்கார், பேட்ட, காஞ்சனா-3, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட  திரைப்படங்களை வெளியிட்டுள்ளது.தற்போது நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா,  கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அண்ணாத்த’  திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார்.  படத்தின் டீசர் அக்டோபர் 14ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த டீசரை 84  லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அண்ணாத்த திரைப்படம் நவம்பர்  4ம் தேதி தீபாவளியன்று உலகம் முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களில்  வெளியிடப்படவுள்ளது.
காப்புரிமை சட்டத்தின்படி அண்ணாத்த திரைப்படத்தின்  வெளியிடும் உரிமை, விநியோக உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் சன்  பிக்சர்ஸ் நிறுவனத்திடமே உள்ளது. இந்த படத்தை வேறு எந்த நிறுவனமும் வெளியிட  உரிமை வழங்கப்படவில்லை.

 இந்நிலையில் சட்ட விரோதமாக இணைய தளங்களில்  பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல், புதுடெல்லி  மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட், பாரதி ஏர்டெல், ஏர்செல் செல்லுலார்  லிமிடெட், மும்பையை சேர்ந்த ஹாத்வே கேபிள் டேடா காம், புதுடெல்லி எக்சைடெல்  பிராட்பேண்ட், வோடோபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் இன்பிராஸ்டக்சர்,  டாடா டெலிசர்வீஸ், சென்னையை சேர்ந்த சிபி டெக்னாலஜிஸ், திருவனந்தபுரத்தை  சேர்ந்த ஏசியா ெநட் சாட்டிலைட் கம்யூனிகேசன், டாடா இன்போசிஸ், கோவையை  சேர்ந்த ரெடிலிங்க் இன்டர்நெட் சர்வீசஸ், கோவையை சேர்ந்த நெக்ஸ்ட்ஜென்  கம்யூனிகேஷன், தெலங்கானாவை சேர்ந்த விர்கோ குளோபல் மீடியா, ஈரோட்டை சேர்ந்த  மைநெட் சர்வீசஸ், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த லிம்ராஸ் ஏரோநெட் பிராட்பேண்ட்  சர்வீசஸ், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.பிராட்பேண்ட் சர்வீசஸ், மயிலாப்பூரை சேர்ந்த பல்சே டெலிசிஸ்டம் உள்ளிட்ட 37 இன்டெர்நெட் சேவை  நிறுவனங்கள் திரைப்பட காட்சிகள், பாடல்கள் போன்றவற்றை மறு தயாரிப்பு செய்து  சிடி, டிவிடி, விசிடி, புளு ரே டிஸ்க், கம்ப்யூட்டர் டிரைவ், பென்  டிரைவ் ஆகியவற்றில் பதிவு செய்து வெளியிட்டு வருகின்றன.   

  மிகக் குறைந்த விலையில் இவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன.  சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் அனுமதி பெறாமல் தியேட்டர்களில்  ரெக்கார்டிங் செய்து வெளியிட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சன்  நெட்வொர்க் அண்ணாத்த திரைப்படம் தொடர்பான எந்த உரிமையையோ, அனுமதியையோ  தரவில்லை.  டேட் டவுன் என்ற முறையில் பல இணையதளங்களும் சட்டவிரோதமாக  திரைப்படங்கள் பதிவிறக்கம் செய்து வெளியிட்டு வருகின்றன. பல வலைத்தளங்கள்  சட்டவிரோதமாக செயல்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த இணைய  தளங்களும், வலைத்தளங்களும் வேறு பெயரில் உலா வருகின்றன. தோப் டிவி என்ற ஒரு  இணையதளம் கூக்குள் குரோமை பயன்படுத்தி விதிகளுக்கு முரணாக இணைய தள  செயலிகளை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை  சட்டவிரோதமாக வெளியிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு  ஏற்படும். எங்கள் நிறுவனம் எந்த இணையதள நிறுவனத்திற்கும் அண்ணாத்த  திரைப்படத்தின் உரிமையை கொடுக்கவில்லை. எனவே, அண்ணாத்த திரைப்படத்தை  அனைத்து இணையதளங்கள், டெலிகிராம், தோப் டிவி, சபாரி, குரோம்,  டிஜான் மொபால்  புரவுசர் போன்றவற்றில் சட்ட விரோதமாக பதிவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம்  செய்யவோ, வெளியிடவோ தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
  இந்த மனு நீதிபதி ஜெ.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சன்  நெட்வொர்க் லிமிடெட் சார்பில் வக்கீல் சினேகா ஆஜராகி வாதிட்டார். வழக்கை  விசாரித்த நீதிபதி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள அண்ணாத்த  திரைப்படத்தை இணையதளங்கள், வலைத்தளங்களில் வெளியிடவோ, பதிவிறக்கம்,  பதிவேற்றம் செய்யவோ கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார்.



Tags : Rajinikanth ,Sun Pictures ,High Court , Starring Rajinikanth in Sun Pictures production ‘Annatha’ image Ban on websites: High Court orders action
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...