தீபாவளிக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

* சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

* போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார், தமிழக போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த முறை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக கே.ேக.நகர் பகுதியில் இருந்து திருவான்மியூர் வழியாக வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளிக்கு 4 விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் துறை செய்துள்ளது. பொருட்கள் வாங்க அதிகளவில் கூட்டம் சேரும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், கோயம்பேடு, பழைய வண்ணாரப்பேட்டை, பூக்கடை, போரூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 சென்னையில் 1,200 சப்-இன்ஸ்பெக்டர்கள், அவர்கள் பயன்படுத்தும் செல்போனில் புதிய மென்பொருளை பதிவேற்றம் செய்து இருக்கிறோம். இந்த மென்பொருளில் 7,800 குற்றவாளிகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வைத்து இருக்கிறோம். கூட்டம் அதிகமாக கூடும் பகுதிகளில் குற்றப்பிரிவு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் போலீசார் டிரேன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதிகளவில் கூட்டம் இருக்கும் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும். தி.நகர் பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க தெற்கு கூடுதல் கமிஷனர் கண்ணன் மற்றும் தி.நகர் துணை கமிஷனர் ஆகியோர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி நகைகள் அணிந்து வரும் பெண்களுக்கு கழுத்தில் நகைகளை மறைக்கும் வகையில் துணி கவசம் வழங்கப்படுகிறது.

பட்டாசுகள் எப்படி வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு வழிக்காட்டுதலை நடைமுறைப்படுத்துவோம். அதன்படி காலை 6 மணி முதல் 7 வரை வரை மாலை 7மணி முதல் 8 மணி வரை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்தாலும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். சென்னை யில் 18 ஆயிரம் போலீசார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தி.நகர் மற்றும் பாண்டி பஜாரில் மட்டும் இணை கமிஷனர் தலைமையில் 2 துணை கமிஷனர்கள், 6 உதவி கமிஷனர்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 683 பட்டாசு கடைகளுக்கு க அனுமதி கொடுத்து இருக்கிறோம்.

Related Stories: