இனி குறும்பு செய்வியா!: உ.பி.யில் குறும்பு செய்த 2ம் வகுப்பு மாணவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு அச்சுறுத்திய தலைமை ஆசிரியர்..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் முதல் தளத்தில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டு அச்சுறுத்தும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிர்சாபூர் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2ம் வகுப்பு பயிலும் சோனு என்கின்ற மாணவர், பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது சக மாணவர்களிடம் அதிக குறும்பு செய்து வந்திருக்கிறார். இதனால் அந்த மாணவனை அச்சுறுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா, முதல் தளத்தில் இருந்து ஒரு காலை மட்டும் பிடித்துக்கொண்டு மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு அச்சுறுத்தியுள்ளார்.

இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இனி இப்படி குறும்பு செய்யமாட்டேன் என்று சொன்னால் தான் விடுவேன் என்று அந்த தலைமை ஆசிரியர் மிரட்ட,  இனி குறும்பு செய்ய மாட்டேன் மன்னித்து விடுங்கள் என மாணவர் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த மாணவனை மேலே தூக்கி இருக்கிறார். அந்த தலைமை ஆசிரியரின் கைப்பிடி கொஞ்சம் நழுவி  இருந்தாலும் அந்த மாணவன் உயிர் இழந்திருக்க கூடும்.

இப்படி ஒரு கொடூர தண்டனையை எந்தப் பள்ளி தலைமை ஆசிரியரும் செய்வாரா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு அச்சுறுத்திய தலைமை ஆசிரியர் சிறார் நீதி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More