மீனவர்களுக்கு மானிய டீசல் அளவை உயர்த்த வேண்டும்: தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி: தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி, முன்பு பன்வாரிலால் மேற்கொண்ட அதே நிர்வாகத் தலையீடுகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் நடவடிக்கை வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். இதனை தமிழகத்தை ஆளும் திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி இருக்கும் இந்த சூழலில் உடனடியாக போர்க்கால அடிப்படையில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும். மேலும், அவற்றின் மதகுகளை சரிசெய்ய வேண்டும். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதேபோல் மீனவர்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

தமிழக அரசு மீனவர்களுக்கு வழங்கும் மானிய டீசலின் அளவை உயர்த்த வேண்டும். விசைப்படகிற்கு அரசு வழங்கும் 1800 லிட்டரை 3500 ஆகவும், நாட்டுப் படகிற்கு வழங்கும் 350 லிட்டரை 700 லிட்டர் ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Related Stories: