×

5 கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் முதல் தவணையாக ரூ9.33 லட்சம் நிதி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 5 கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சி  பணிக்கும், சந்தைப்படுத்தலுக்கும்  தமிழ்நாடு அரசின் முதல் தவணை  நிதியுதவியாக ரூ.9.33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் இன்று (29.10.2021) சென்னை கிண்டியில் சிட்கோ அலுவலக கூட்ட அரங்கில் குறு, சிறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் சுயவேலைவாய்ப்பு கடன் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியம் உள்ளிட்ட பல்வேறு மானிய திட்டங்கள் மற்றும் தொழிற் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து 38 மாவட்ட தொழில் மையங்களின்  பொது மேலாளர்கள் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது.   

அப்போது அமைச்சர் தமிழ்நாடு தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த செயல்படுத்தப்படும் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின் கீழ் புதிய 5 கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.9.33 இலட்சம் மானிய உதவித்தொகையாகவும், சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.14.44 கோடி திட்ட மதீப்பீட்டில்   தொழில் தொடங்க ரூ.2.57 கோடி மானியத்துடன் கடன் உதவியும், முதலீட்டு மானிய திட்டத்தின் கீழ் 5 நிறுவனங்களுக்கு ரூ.1.09 கோடி மானியம் வழங்குவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

பிறகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது: மாவட்ட தொழில் மையங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் நடப்பாண்டில் (2021 -22) இதுவரை 2912 பயனாளிகளுக்கு ரூ.107.50 கோடி மானியத்துடன் ரூ.352.93 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  முதலீட்டு மானியம், மின் மானியம்,  பின்முனை வட்டி மானியம் மற்றும் மின்னாக்கி மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் இதுவரை 2868 நிறுவனங்களுக்கு ரூ.173.72 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், வாகன டெலிமேட்டிக்ஸ் உருவாக்கிய பிரப்ஜோத் கவுர்க்கு ரூ.2.50 லட்சமும், இணைய பாதுகாப்பு மின்பொருள் தளம் அமைத்த சித்தார்தன்க்கு ரூ.2.50 லட்சமும்,

வெப்ப-உப்பு  நீக்கி முறை மூலம் உப்பு நீரை குடிநீராக சுத்திகரிக்கும் கருவியை உருவாக்கிய பிரித்திவ்ராஜன்க்கு ரூ.2.37 லட்சமும், விர்ச்சுவல் ரியாலிட்டியை பயன்படுத்தி நோயாளி தொலைதூரத்தில் இருக்கும் போதே மருத்துவரால் இணையதளத்தை உபயோகப்படுத்தி கண்களை பரிசோதிக்கும் கருவியை உருவாக்கிய மகேஸ்வரி சினிவாசன்க்கு ரூ.1 லட்சமும், லேத் ஆப்செட் மூலம் மிக எளிமையான முறையில் துளையிட உதவும் கருவி உருவாக்கிய அருணா ராணிக்கு ரூ96,000மும், 5 கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சி பணிக்கும், சந்தைப்படுத்தலுக்கும் தமிழ்நாடு அரசின் முதல் தவணை நிதியுதவியாக ரூ.9.33 இலட்சம் இன்றைய தினம் வழங்கப்பட்டது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 161 கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.4.19 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும்  தொழில் வணிக  இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன்,  சிறப்புச் செயலர் மகேஸ்வரி, கூடுதல் ஆணையர் கிரேஸ்லால்ரின்டிக்கி பச்சாவ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Thamo Anparasan , 9.33 lakh in the first tranche on behalf of the government to encourage 5 inventors: Minister Thamo Anparasan
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...