×

ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் ஆண்டவரையும் சந்திக்கிறார்

புதுடெல்லி: ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து ரோம் சென்றடைந்தார். இத்தாலியின் ரோம் நகரில் நாளை  (அக். 30) மற்றும் நாளை மறுநாளில் 16வது ஜி-20 நாடுகளின் உச்ச மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இத்தாலி தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாட்டுக்கு இடையே வாடிகன் செல்லும் மோடி, போப் ஆண்டவரையும் சந்திக்கிறார். தொடர்ந்து இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதன்பின், பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக, கிளாஸ்கோ புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் 26வது கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாடு நவம்பர் 1, 2ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும், பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். அதனால், மேற்கண்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை ரோம் சென்றடைந்தார்.

Tags : Modi ,Rome ,G-20 ,Vatican ,Pope ,Lord , Prime Minister Narendra Modi travels to Rome to attend G20 summit: Pope meets with Vatican
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...