×

முல்லை பெரியாறு அணை திறப்பு: 2 கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை இன்று காலை திறக்கப்பட்டது. 7.29 மணிக்கு முதல் மதகும், 7.30க்கு 2வது மதகும் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கேரள அமைச்சர்கள் 2 பேர் பங்கேற்றனர்.
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, முல்லை பெரியாறு உள்பட அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. முல்லை பெரியாறு நீர்மட்டமும் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து அணையை திறக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு ஒரு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அக்டோபர் 31ம் தேதி வரை 138 அடியாகவும், நவம்பர் 10 வரை 139.50 அடியாகவும், நவம்பர் 20ம் தேதி வரை 141 அடியாகவும், நவம்பர் 30ம் தேதி வரை 142 அடியாகவும் நிலைநிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கிடையே அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டியதை தொடர்ந்து இன்று காலை அணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தண்ணீர் செல்லும் பெரியாறு நதியின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது. அணை திறக்கப்படுவது குறித்து வண்டி பெரியார், ஏலப்பாறை, உப்புத்தரை, மஞ்சுமலை உள்பட பகுதிகளில் வாகனங்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து 1300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அணை திறப்பதற்கான ஆயத்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், வருவாய்துறை அமைச்சர் கே. ராஜன் ஆகியோர் அணையை பார்வையிட சென்றனர். காலை 7 மணிக்கு அணை நீர்மட்டம் 138.70 ஆக இருந்தது. அதன்படி அணை திறப்பதற்கான முதல் சைரன் ஒலிக்கப்பட்டது. 7.15 மணிக்கு 2வது சைரனும், 7.24க்கு 3வது சைரனும் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து 7.29க்கு முல்லை பெரியாறு அணையின் 3வது எண் கொண்ட மதகும், 7.30மணிக்கு 4வது எண் கொண்ட மதகும் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக இந்த மதகுகள் வழியாக வினாடிக்கு 534 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் அலர்ட்
கேரளாவில் கனமழை காரணமாக இடுக்கி அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2398 அடியை தாண்டியது. ஏற்கனவே முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டுள்ளதால், இன்றே இங்குள்ள தண்ணீர் இடுக்கி அணைக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மேலும் உயரும். இதனால் இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்திற்கு இன்று 135 வயது
முல்லைபெரியாறு அணை கேரள மாநில எல்லைக்குள் இருந்தாலும், அணை முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கு சொந்தமானதாகும். கடந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1886ம் ஆண்டு பெரியார் அணையின் குறுக்கே 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பெரியாறு அணை கட்டப்பட்டது. ஆங்கிலேய பொறியாளர் பென்னி குயிக் மேற்பார்வையில் 9 வருடங்களாக நடந்த கட்டுமான பணிகள் 1895ல் முடிவடைந்தது. இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக 1886ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மூலம் திருநாள் முன்னிலையில் திவான் வி ராமையங்கார், சென்னை மாகாணத்தின் சார்பில் கொச்சி-திருவிதாங்கூர் பொறுப்பில் இருந்த ஜான்சைல்டு ஹானிங்டன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 999 வருடங்களுக்கு இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.

அதுவரை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் தான் இந்த அணை இருக்கும். கேரளாவுக்கு குத்தகை பணமாக ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் உள்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் 1970 மே 29ம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போது குத்தகை பணம் ஏக்கருக்கு ரூ.30 என்று நிர்ணயிக்கப்பட்டது. முல்லைபெரியாறு அணை தண்ணீரை பயன்படுத்தி தமிழ்நாடு தயாரிக்கும் மின்சாரத்திற்காக கிலோ வாட்டுக்கு ரூ.12 கேரளாவுக்கு கொடுக்க வேண்டும். 30 வருடங்களுக்கு ஒரு முறை மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. முல்லை பெரியாறு அணை ஒப்பந்தம் போடப்பட்டு இன்று 135 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mulla Periyaru Dam , Mullaperiyaru Dam Opening: Participation of 2 Kerala Ministers
× RELATED முல்லை பெரியாறு அணையில் இருந்து...