களியனூரில் விவசாயிகள் சொந்த செலவில் கட்டிய 20 மாட்டு கொட்டகைக்கான நிதியை சுருட்டிய ஒப்பந்ததாரர்-உதவி திட்ட அலுவலர் நேரில் ஆய்வு

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அடுத்த களியனூர் ஊராட்சியில் 20 விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மாட்டு கொட்டகை கட்டிய நிலையில், அதற்காக அரசு ஒதுக்கிய நிதியை ஒப்பந்ததாரர் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாரின் பேரில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த களியனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, 20 விவசாயிகளை தேர்வு செய்து, மாட்டு கொட்டகை அமைத்துக்கொள்ள அரசு தலா ₹2.70 லட்சம் ஒதுக்கீடு செய்தது. கடந்த மார்ச் மாதம், மாட்டு கொட்டகை அமைத்துக்கொடுக்க ஒப்பந்ததாரருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் மாட்டுக் கொட்டகை அமைத்து கொண்டனர். பின்னர், அதற்கான தொகையை கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் 6 மாதங்களாகியும், அவர்களுக்கு கொட்டகை அமைத்ததற்கான தொகை வழங்கப்படவில்லை.

 இதையடுத்து அவர்கள் பள்ளிபாளையம் ஒன்றிய அலுவலகத்தை அணுகினர். அப்போது கணக்குகளை ஆய்வுசெய்த அலுவலர்கள், மாட்டுக் கொட்டகை கட்டியதற்கான நிதியை, ஏற்கனவே ஒப்பந்தக்காரர் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் புகழேந்தி, கிருஷ்ணராஜ், சுப்பிரமணி ஆகியோர், இதுகுறித்து நாமக்கல் கலெக்டருக்கு புகார் அனுப்பினர். அந்த புகார் தொடர்பாக மாவட்ட உதவி திட்ட அலுவலர் இன்பா, நேற்று களியனூருக்கு நேரில் சென்று, விவசாயிகள் சொந்த செலவில் அமைத்திருந்த மாட்டுக் கொட்டகைகளை ஆய்வு செய்தார். அப்போது, கொட்டகை கட்டியதற்கான தொகையை தங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான விசாரணை தொடரும் என உதவி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related Stories: