×

புகைபிடிக்கும் காட்சியில் எச்சரிக்கை வாசகம் முறையாக இல்லை!: நடிகர் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி'படத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது திரையில் இடம்பெறவேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால் பட தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு புகையிலை கட்டுபாட்டுக்கான மக்களமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக மனுதாரர் தொடர்ந்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு மூலம் படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ், இயக்குனர் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியும், மேற்கொண்டு எந்த தவறும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக பட நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, புகையிலை மிக மோசமான சுகாதார பாதிப்பை தரும் பொருள். புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புக்கு ரூ.13,500 கோடி செலவிடப்படுகிறது என தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.


Tags : Icourt ,Sagittarius ,
× RELATED தனுசு