கனமழைக்கு இடிந்து விழுந்தது அரசு பள்ளிக்கு கழிப்பறை சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்-பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோரிக்கை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்மம்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், 6 முதல் 10ம் வகுப்பு வரை 435 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டாரத்திலேயே அதிகளவில் மாணவ, மாணவிகள் கொண்ட பள்ளியாக திகழ்கிறது. இடப்பற்றாக்குறையுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கழிவறை சுற்றுச்சுவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் முழுவதும் இடிந்து விழுந்தது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன்ராம் கூறுகையில், ‘இப்பள்ளியில் ஏற்கனவே கழிவறை பற்றாக்குறை உள்ளதால், 2 ஆண்டுகளாக கூடுதல் கழிவறைகள் கட்டித் தரக்கோரி சிஇஓ, டிஇஓ உள்ளிட்ட அலுவலர்களிடம் கேட்டும் பலனில்லை. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் மாணவர் சேர்க்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பெய்த கனமழைக்கு கழிவறை சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது. இதனால், மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக எம்எல்ஏவிடம் மனு அளித்துள்ளோம். மாணவ- மாணவிகளின் நலன் கருதி, நமக்கு நாமே திட்டம் அல்லது தன்னார்வ அமைப்புகள் கழிவறை மற்றும்  சுற்றுச்சுவர்களை கட்டித்தர முன்வர வேண்டும்,’ என்றார்.

Related Stories: