தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்‍கு ரூ.44,000 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையாக விடுவித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்‍கு 44 ஆயிரம் கோடி ரூபாயை ஜி.எஸ்.டி. இழப்பீடாக ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீடாக கடந்த ஜூலை மாதம் முதல் தவணையாக 75 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. பின்னர் 2-வது தவணையாக இம்மாத தொடக்கத்தில் மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 3வது தவணையாக 44 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மாநிலங்களுக்‍கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதியாக ஒன்றிய அரசு அளித்துள்ளது.

இதில் தமிழகத்தின் பங்காக 2 ஆயிரத்து 240 கோடியே 22 லட்சம் ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற பொது செலவினங்களை மாநிலங்கள் எதிர்கொள்ள இந்த இழப்பீட்டுத் தொகை உதவியாக இருக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் வெளிச்சந்தையில் கடன் பெற்று மாநிலங்களுக்கான இழப்பீட்டை அளிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இதுவரை 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: