×

ஆப்கானில் தலைவிரித்தாடும் பட்டினிக் கொடுமை!: வேலை இல்லாமல் தவிப்பதாக மக்கள் வேதனை...சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட ஐ.நா. வேண்டுகோள்..!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து பட்டினிகொடுமை தலைவிரித்தாடுகிறது. சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 99 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். 35 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்நாட்டிலேயே அகதிகளாக பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலாக 2 கோடியே 80 லட்சம் பேர் உணவில்லாமல் அவதிப்படுவதாக உலக உணவுத்திட்ட அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

வேலை இல்லாமல் மிகுந்த சோர்வடைந்து இருப்பதாக ஆப்கான் மக்கள் புலம்புகின்றனர். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வறுமை மற்றும் பட்டினிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பணம், நிவாரணப் பொருட்களை விநியோகித்து வருகின்றன. உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. ஜெர்மன் அமைப்புகளும் காபூலில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டன. பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் பரிதவிப்புடன் காத்திருந்த காட்சிகள் சோகத்தை வரவழைக்கின்றன. இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்ப ஐ.நா. உதவ வேண்டும் என தாலிபான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுமார் 3,200 கோடி ரூபாய் நிதியை தாலிபான் அரசு பயன்படுத்த முடியாத வகையில் சர்வதேச நாணய நிதியம் முடக்கி வைத்துள்ள நிலையில், அதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல ஆப்கான் மத்திய வங்கிக்கு சொந்தமான 74,000 கோடி ரூபாய் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள நிலையில் அவற்றை விடுவிக்கும் எண்ணம் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


Tags : Afghanistan , Afghanistan, famine, international nations, UN.
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி