×

வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு கடன் உதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வங்கி வாடிக்கையாளர்களை நோக்கிய தொடர்பு முகாம் காஞ்சிபுரம் பல்லவன் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டல மேலாளர் ஸ்ரீமதி முன்னிலை வகித்தார். அனைத்து வங்கிகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை இந்தியன் வங்கியின் பொது மேலாளர் ராஜேஸ்வர ரெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இம்முகாமில் 20 வங்கிகள் மற்றும் 5 அரசு அலுவலகங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கடனுதவிகள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள். முகாமில் 1834 பயனாளிகளுக்கு 113 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். விழாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் ஆஷித்ரஞ்சன் சின்கா, பேங்க் ஆப் பரோடா உதவி பொது மேலாளர் டிஎம் பதான், கனரா வங்கி உதவி பொது மேலாளர் ஜே சிவகுமார் உள்பட பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் சண்முகராஜ் செய்திருந்தார்.

Tags : Credit assistance to beneficiaries at the Bank Customers Contact Camp
× RELATED லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி...