அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி மறுப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவை ஜான்சிராணி விஸ்வநாதன் உள்ளார். அவர்மீது 9 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டி, திருத்தணி கோட்டாட்சியர் சத்யாவை சந்தித்து மனு வழங்கினர். அதனடிப்படையில், நேற்று பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக மன்றக் கூட்டத்தில் கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுகவினர் 4 பேர், அதிமுகவினர் 3 பேர், தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலா ஒருவர் வீதம் என 9 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அதிமுக ஒன்றிய குழு தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

ஒன்றியத்தில் மொத்தமுள்ள 12 கவுன்சிலர்களில் ஒருவர் இறந்து விட்ட நிலையில், 11 பேரில் 9 பேர் ஒன்றிய குழு தலைவருக்கு எதிராக ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இருப்பினும், பஞ்சாயத்துராஜ் சட்ட விதிகளின்படி மொத்தம் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் 10 பேர் இருந்தால் மட்டுமே, ரகசிய வாக்கெடுப்பு கோர முடியும் என்றும், அப்போதுதான் ஒன்றிய குழு தலைவருக்கு எதிரான ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க முடியும் என்று கோட்டாட்சியர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, கோட்டாட்சியர், ஒன்றிய கவுன்சிலர்கள் இடையே, கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கூட்டத்தை நடத்த போதுமான அளவிற்கு கோரம் உள்ளதாகவும், ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், கோட்டாட்சியர் அனுமதி தர மறுத்துவிட்டார். இதனையடுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் 9 பேர் தனித்தனியாக ஒன்றிய குழு தலைவருக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் தந்தனர். புகார் மனுக்கள்  தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் சத்தியா தெரிவித்தார். பின்னர் பிடிஓ அலுவலகத்தில் திமுக., அதிமுகவினர்  ஏராளமானோர் குவிந்தனர்.

Related Stories: