×

முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார்: அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் அஞ்சலி

மதுரை: முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடல்குறைவால் நேற்று காலமானார். மதுரை, பெத்தானியாபுரம், பாஸ்டின் நகரை சேர்ந்தவர் நன்மாறன் (74). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான இவர், மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர். இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே மதுரை அரசு மருந்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4 மணிக்கு காலமானார். அவர் மறைவுச் செய்தி கேட்டு, அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.பி சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நன்மாறனுக்கு சண்முகவள்ளி என்ற மனைவி, குணசேகரன், ராசசேகரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* ‘எளிமையின் சிகரம் : முதல்வர் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: ஏழை, எளிய மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலித்தவர் நன்மாறன். சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு ஒரு கடிதம் எழுதி, “இந்தியா முழுவதும் பிற்போக்கு தலைவிரித்தாடும்போது, தமிழ்நாட்டில் முற்போக்கு முளைவிட்டு கிளம்பியிருக்கிறது” என்றும், “நூறு நாள் ஆட்சி 100க்கு 100 மார்க்” என்றும் பாராட்டியிருந்தார். அக்கடிதத்தை படித்துப் பார்த்துவிட்டு அவரை அலைபேசியில் நானே தொடர்புகொண்டு பேசினேன். அலைபேசியில் நான் கேட்ட அவரது குரல் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கையில் திடீர் உடல் நலக்குறைவால் மறைவெய்திவிட்டார் என்ற செய்தி கிடைத்தது பேரதிர்ச்சியளிக்கிறது.  இன்றைய தலைமுறையும், எதிர்கால தலைமுறையும் ஒரு மதிப்புமிக்க “மாதிரி மக்கள் பிரதிநிதியை” இழந்து தவிக்கிறது. பொதுவாழ்வில் நேர்மையின் இலக்கணமாகவும் எளிமையின் சிகரமாகவும் விளங்கிய நன்மாறனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : MLA ,Nanmaran , Former MLA Nanmaran passes away: Tribute to ministers, Marxist executives
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்