ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் இயற்கை நீதி எப்படி மீறப்பட்டுள்ளது? அப்போலோவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கபட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் எதன் அடிப்படையில் இயற்கை நீதியை மீறியுள்ளது?’ என அப்போலோ மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்கிறது. இதன் விசாரணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது.

நேற்று முன்தினம் இது விசாரிக்கப்பட்டபோது, ‘வழக்கை திசை திருப்பும் செயலில் அப்போலோ மருத்துவமனை ஈடுபட்டு வருகிறது,’ என தமிழக அரசு குற்றம்சாட்டியது. நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்றும் 3வது நாளாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆஜராகி, ‘ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை ஆணையம் கிடையாது; உண்மை கண்டறியும் ஆணையம். உண்மை தகவல்களை திரட்டி வழங்குவது மட்டுமே அதன் பணி. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 50 அப்போலோ மருத்துவர்களை அது விசாரித்துள்ளது.

இந்த ஆணையத்திற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவதற்கு எந்த மறுப்பும் இல்லை. உச்ச நீதிமன்றம் விரும்பினால், அதை செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையில் இருந்துதான் மருத்துவர்களை தேர்ந்தெடுப்போம். இதில், அப்போலோ நிர்வாகம் தலையிடக் கூடாது. இந்த வழக்கில் தேவையற்ற வாதங்களை அது வைத்து வருவதால், இந்த விசாரணை தொடர்கதையாக இருக்கிறது. அதனால், அப்போலோவின் வாதம் எப்போது முடியும் என்பதை அவர்கள் கூற வேண்டும்,’ என தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனையின் வழக்கறிஞர், “மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா எந்தநிலையில் வந்தார் என்பதை நாங்கள் விவாதிக்க விரும்பவில்லை. அவருக்கு சிகிச்சை எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதைதான் பார்க்க வேண்டும். சிகிச்சை தொடர்பாக 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட விளக்கம் உள்ளது. அதை உரிய மருத்துவ நிபுணர்கள் கொண்டு விசாரிக்க வேண்டும். அதை ஆணையம் செய்யாமல், ஆரம்பம் முதலே மருத்துவமனைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

எனவே, பாகுபாட்டுடன் செயல்படும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராக மாட்டோம்.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தகுதி இல்லை. அது வரம்பு மீறியும், ஒருதலைபட்சமாகவும் நடக்கிறது,’ என கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறீர்கள். எந்த அடிப்படையில் அது இயற்கை நீதியை மீறி உள்ளது என்பதை குறிப்பிடுங்கள்,’ என அப்போலோ மருத்துவமனைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

More