பல ஆண்டுகளுக்கு பாஜ.வுடன்தான் மக்கள் போராட வேண்டியிருக்கும்: பிரசாந்த் கிஷோர் கருத்து

பனாஜி: இந்தியாவில் பாஜ வலுவான, சக்தி மிக்க கட்சியாக இருக்கும் என்பதால், இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்கள் அக்கட்சியுடன் போராட வேண்டியதிருக்கும் என்று தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

கோவா அருங்காட்சியகத்தில் நடந்த கலந்துரையாடலில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பாஜ. இன்னும் பல ஆண்டுக்கு வலுவான, சக்தி மிக்க கட்சியாக இருக்கும். அக்கட்சியுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்கள் போராட வேண்டியிருக்கும். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இந்திய அரசியலின் மையமாக பாஜ இருக்கும். அதாவது, நாடு சுதந்திரம் பெற்ற பிறக காங்கிரஸ் முதல் 40 ஆண்டுகளில் இருந்ததைப் போல் பாஜ.வும் வலுவாக இருக்கும்.

இந்தியாவில் 30 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டாலே போதும், அக்கட்சி தேசிய அரசியலில் இருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. எனவே, மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பாஜ எங்கும் போகப் போவதில்லை. காலப் போக்கில் மக்கள் மோடியைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று ராகுல் நினைக்கிறார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒரு போதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது. மோடிக்கு எதிராகவோ, பாஜ.வுக்கு எதிராகவோ வலுவான கூட்டணி அல்லது அணி உருவாகாது என்றார்.

* அன்றே சொன்னார் அமித்ஷா

இது குறித்து பாஜ. தலைவர் அஜய் செக்ராவத், ``இறுதியில், பாஜ. பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் வலிமையான சக்தியாக தொடரும் என்று பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தான் அமித் ஷா முன்பே அறிவித்தார்,’’ என்று கூறி உள்ளார்.

Related Stories: