நீட் தேர்வு முடிவை வெளியிடலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.  நாடு முழுவதும் கடந்த மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இரண்டு மாணவர்கள் தரப்பில் தனிப்பட்ட முறையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘‘கொரோனா பிரச்சனையின் காரணமாக நீட் தேர்வு எழுத முடியவில்லை. ஆனால் அதற்கு நாங்கள் விண்ணப்பித்திருந்தோம்.

அதனால் எங்கள் இருவருக்கும் மட்டும் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இரண்டு மாணவர்களுக்கும் நீட் தேர்வை நடத்தி முடித்த பின்னர், அதன் முடிவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தேசிய தேர்வு முகமை தொடர்ந்த மேல்முறையிட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு முகமை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், விரைவில் தேர்வு முடிவுகள் வெள்யாக உள்ள நிலையில் இரண்டு பேருக்கு மட்டும் எப்படி நீட் தேர்வை தனிப்பட்ட முறையில் நடத்த முடியும். அப்படி செய்யும் பட்சத்தில் நாடு முழுவதும் தேர்வு எழுதாத மாணவர்களும் இதே கோரிக்கையை வைத்தால் நிலவரம் மிகவும் மோசமாகிவிடும்.

மேலும் தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவை தெரிந்து கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு தயாரகி வருகின்றனர். இதுபோன்ற சூழலில் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். இதையடுத்து உத்தரவில், ‘நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நீட் தேர்வின் முடிவுகளை, இரண்டு மாணவர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

அதனால், இந்த விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், நீட் தேர்வின் முடிவுகளை வெளியிடவும் தேசிய தேர்வு முகமைக்கு எந்த தடையும் கிடையாது,’ என தெரிவித்த நீதிமன்றம், வழக்கையும் நேற்று முடித்து வைத்தது.

Related Stories:

More