சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் ஓபிஎஸ் கருத்து அவரது கருத்து: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம். ஓபிஎஸ் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரத்தில் நேற்று அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:அரசியல்வாதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம், புகழேந்தியின் கருத்துக்கு பதில் கூற வேண்டிய தேவையில்லை. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள் ரத்தம் சிந்தி, அவர்களின் தியாகத்தில் உருவான கட்சி அதிமுக. அதிமுக எப்போதும் எஃகு கோட்டையாகவே திகழும். இந்த எஃகு கோட்டையான அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்ற கட்சியின் நிலைப்பாட்டையே நான் கூறி வருகிறேன். கட்சிக்கும், சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்புடையவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என ஏற்கனவே தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்சின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: