×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: வேளாண்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைகளைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்கள் மாவட்ட அளவில் மேற்கொண்ட பணிகள் தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் காணொலி வாயிலாக நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:நடப்பு சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் மொத்தம் 14 லட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுதானியங்கள், பயறு வகைகள், கரும்பு, பருத்தி, எண்ணெய்வித்துக்கள் போன்ற பயிர்களையும் சேர்த்து, அனைத்து வேளாண் பயிர்களில் 46.2 லட்சம் எக்டர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை  24.41 லட்சம் எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு போதுமான அளவு தரமான விதைகளை வட்டார வாரியாக அரசு விரிவாக்க மையங்களிலும், தனியார் கடைகளிலும் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாசன நீரை மிச்சப்படுத்த நேரடி நெல் விதைப்பு முறையினை பிரபலப்படுத்துவதற்கு வேளாண் விரிவாக்க அலுவலர்கள் கிராம அளவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை கூடுதலாக ஒதுக்கியுள்ளது.

இக்கூடுதல் ஒதுக்கீட்டின்படி, நமக்கு தேவையான உரங்களை சம்பந்தப்பட்ட உர நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. யூரியா, டிஏபி போன்றவை தேவைக்கேற்ப இருப்பு உள்ளதை தினமும் கண்காணிக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப்பருவத்தில் பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் ஏற்படும் என்பதால், ஒவ்வொரு கிராமத்திலும், பூச்சி நோய் கண்காணிப்புத்திடல் அமைத்து, கூர்மையாக ஆய்விட்டு, அனைத்து ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.

அனைத்து விவசாயிகளும் உரிய காலக்கெடுவுக்குள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பதிவு செய்வதற்கு விரிவாக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்கு பருவ மழை பாதிப்பை சமாளிக்க  805 கனரக மரம் அறுக்கும் கருவிகளும், 20 நீர் இறைக்கும் பம்புகளும், 29 டிராக்டருடன் கூடிய  டிப்பிங் டிரைலர்களும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். வேளாண் விற்பனைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் உள்ள கிடங்குகள் நன்கு சுத்தமாக, மழை நீர் தேங்காமல் இருக்கும் படி உறுதி செய்ய வேண்டும். நடப்பாண்டில் அனைத்து நீர்நிலைகளிலும் போதுமான நீர் உள்ளதால், விரிவாக்கப்பணியாளர்கள் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து உயர் விளைச்சலுக்கு உதவ வேண்டும் என்றார்.

Tags : Northeast Monsoon ,Minister of Agriculture , Northeast monsoon, ready, Minister instructed
× RELATED தென்னை பயிரிடும் விவசாயிகளின் நலனை...