×

நாகர்கோவிலில் வாகன ஓட்டிகள் அவதி: சாலையின் நடுவே திடீர் பள்ளம்: விபத்து ஏற்படும் முன்பு சரிசெய்யப்படுமா?

நாகர்கோவில்,: நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து இருக்கிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாளசாக்கடை திட்டபணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஆனால் சாலையின் நடுவே போடப்பட்டு இருக்கும் மேன்கோல்கள் அடிக்கடி உடைவது வாடிக்கையாகிவிட்டது. இதுவே ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்பட காரணமாகிவிடுகின்றன. இதனை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சரிசெய்யும் பணியும் நடந்து வருகிறது. பெரும்பாலான மேன்கோல்கள் சாலையின் நடுவே அமைந்து உள்ளது. மேன்கோல்கள் உடைவதால் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் மணியடிச்சான் கோயில் ஜங்சன் பகுதியில் மேன்கோல் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் ஒரு மரதுண்டு மற்றும் சில இலை தழைகளை எடுத்து வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பதை ஏற்படுத்தி உள்ளனர். இதனை பார்த்து வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும் வகையில் எச்சரிக்கையாக உள்ளது. அவ்வைசண்முகம் சாலையில் குறிப்பாக மீனாட்சிபுரம் பகுதியில் நகை கடைகள், ஜவுளிகடைகள் உள்பட பல வணிக நிறுவனங்கள் உள்ளன. தீபாவளி நெருங்குவதையொட்டி பொது மக்கள் அதிக அளவு ஜவுளிகடைக்கு துணி எடுப்பதற்கு வருவார்கள். ஆகவே இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படுவதற்கு முன்பே, பள்ளத்தை சரிசெய்ய பொது மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nagargov , Nagercoil, motorists
× RELATED நாகர்கோவிலில் திறன் மேம்பாட்டு கழக...