×

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க அனுமதி கோரிய கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி : முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க அனுமதி கோரிய கேரள அரசின் கோரிக்கையை  உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும் கீழாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் முல்லை பெரியாறு நீர் மட்டத்தை குறைக்க வேண்டியது இல்லை என்று கண்காணிப்பு குழுவும், மத்திய அரசும் தெரிவித்துவிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு அளித்த பதிலில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது. அங்கு 142 அடி வரை நீர் தேக்க முடியும் என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 126 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணை மிகுந்த பலவீனமாக இருப்பதாகவும் இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டிய தேவை இருப்பதாகவும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் 5 மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்கும் என்று கேரள அரசு கூறியுள்ளது. 142 அடிக்கு தண்ணீர் சேமிக்கலாம் என்ற மேற்பார்வைக் குழுவின் கருத்தை ஏற்க முடியாது என்றும் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்த கூடாது என்றும் கேரள அரசு கூறியது.

இதைத் தொடர்ந்து மேற்கண்ட வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், சிடி ரவிக்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 139.5 அடி வரை மட்டுமே தேக்கிவைக்க வேண்டும். அடுத்த விசாரணை வரை இவர்கள் நீரின் அளவை உயர்த்த கூடாது என்று வாதிட்டார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 139.5 அடி வரை தேக்கி வைக்க முடியும். நவம்பர் 10 வரை மட்டுமே எங்களால் இந்த நீரின் அளவை தேக்கி வைக்க முடியும். அதற்கு பின் நாங்கள் நீரின் அளவை உயர்த்துவோம் என்று வாதிட்டார். இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

 அதன்படி நவம்பர் 10ம் தேதி முல்லை பெரியாறு அணை நீரின் அளவை 139.5 அடி வரை தேக்கி வைக்க வேண்டும் என்றும் நவம்பர் 8ம் தேதிக்குள் கேரளா அரசு புதிய பிரமாண பத்திரத்தை முழுமையான விவரங்களோடு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Tags : Supreme Court ,Kerala Government ,Mulla Periaru dam , முல்லை பெரியாறு அணை
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...