விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற 3 பெண்கள் லாரி மோதி சாவு: ஹரியானாவில் இன்று பயங்கரம்

ஹரியானா: ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநில விவசாயிகள் சங்கம், டெல்லி எல்லையில் முகாமிட்டு கடந்த 10 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 3ம் தேதி ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சென்றனர். அப்போது, அவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி காட்டினர். இதனால் விவசாயிகளுக்கும், பாஜ தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையானது. துணை முதல்வர் மற்றும் அமைச்சருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 8 விவசாயிகள் படுகாயமடைந்தனர்.இந்த வன்முறையை கண்டித்து உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் விவசாய அமைப்புகளின் அழைப்பின் பேரில் பல போராட்டங்கள் நடந்தன.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, விசாரணைக்காக போலீசார் அனுப்பிய சம்மன்படி, கடந்த 9ம் தேதி ஆசிஷ் ஆஜரானார். அவரிடம் சிறப்பு புலனாய்வு படை போலீசார் விசாரித்தனர். சரியாக பதிலளிக்காததால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஹரியானாவின் பகதூர்கரில் திக்ரி எல்லையில், வேளாண் சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள 3 பெண்களும் அடங்குவர். இவர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்று விட்டு, தங்களது கிராமத்துக்கு செல்வதற்காக ஹரியானாவின் பகதூர்கார் ரயில் நிலையத்துக்கு செல்வதற்காக திக்ரி எல்லை அருகே ஆட்டோ ரிக்‌ஷாவுக்காக காத்திருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி, இவர்கள் 3 பேர் மீதும் மோதியது.

இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், தப்பி ஓடினார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர்கள், சிந்து கவுர் (60), அமர்ஜீத் கவுர் (58), குர்மெயில் கவுர் (60) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மான்சா மாவட்டத்தில் உள்ள கீவா டையலுவாலா கிராமத்தை சேர்ந்தவர்கள். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More