திருவில்லிபுத்தூர் மேகமலை காப்பகத்தில் நவ. 1 முதல் புலிகள் கணக்கெடுப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வரும் நவ. 1 முதல் 8ம் தேதி வரை புலிகள் கணக்கெடுப்பு துவங்க உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் நேற்று திருவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பொது கணக்கெடுப்பு நடைபெற்றாலும், நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த பிறகு வரும் நவ. 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதற்காக திருவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மைய அலுவலகத்தில், கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ரேஞ்சர்கள் செந்தில்குமார், கோவிந்தன், வனவிரிவாக்க மைய ரேஞ்சர் பால்பாண்டியன், சாப்டூர் ரேஞ்சர் செல்லமணி உட்பட வனத்துறை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 40 பீட்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர்.கணக்கெடுக்கும்போது வனவிலங்குகள் தாக்க முயற்சித்தால் எவ்வாறு தப்பிப்பது, புலியை பார்த்தால் எப்படி பதிவு செய்வது உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியை ஆனைமலை காப்பக உயிரியலாளர் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி மற்றும் ஆறுமுகம், மேகமலை புலிகள் காப்பக உயிரியலாளர் பார்த்திபன் ஆகியோர் வழங்கினர். மேகமலை புலிகள் கணக்கெடுப்பு ஏற்பாடுகள் கள இயக்குனர் தீபக் பஸ்கி மற்றும் துணை இயக்குனர் திலீப் குமார் ஆகியோர் உத்தரவுப்படி நடந்து வருகிறது.

தமிழகத்தில் 264 புலிகள்

புலிகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சியில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘2018ம் ஆண்டு கணக்கின்படி நாட்டில் 2,967 புலிகள் இருப்பதாக தெரியவந்தது. தமிழ்நாட்டில் 264 புலிகள் இருந்தது. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை பொறுத்தவரை கடந்த கணக்கெடுப்பில் 11 புலிகள் இந்த பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது’’ என தெரிவித்தார்.

Related Stories: