×

‘தோழர்’ என்ற வார்த்தை அழகானது

நன்றி குங்குமம் தோழி

சமூகத்தை நேர்மையான பாதையில் கொண்டு செல்ல அதற்கான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய படைப்புகள் தமிழ் திரைப்படத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவையே. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ஆக்கப்பூர்வமான படைப்பாக மக்கள் கொண்டாடினர். இந்த படத்தில் தனது இயல்பான நடிப்பில், ‘ஜோ’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் திசைமாற்றியவர் ஆனந்தி.

இந்த வெற்றியைத் தொடர்ந்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்துவரும் ஆனந்தி, தற்போது மீண்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இப்படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ஆனந்தி, இதில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதற்கு முன்பு நடித்த படங்களைவிட முற்றிலும் வேறுபட்டிருக்கும். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஜோவை இந்த படத்தில் பார்க்க முடியாது. ஒரு பெண், சுதந்திரத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடக்கூடியவளாக இந்த கதாபாத்திரம் இருக்கும். அவளுக்குக் காதல் வந்தால் தைரியமாகப் போய் சொல்லி, அந்த நபரையே கிண்டல் அடிப்பவளாகவும் இருப்பாள். படத்தில் வரும் காதல், ரொமான்ஸ், எல்லாவற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக எனக்கு அமைந்திருக்கிறது.

இந்த கதாபாத்திரத்தை நான் ரொம்ப நேசித்து நடிச்சிருக்கேன். முற்றிலும் ஒரு மாறுபட்ட ஆனந்தியை இந்த படத்தில் பார்க்கலாம். இப்படியான படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதே சமயம் கற்பனை கதாபாத்திரமாக இல்லாமல் இதுபோன்ற இயல்பான கதாபாத்திரத்தில் நடிப்பது பிடித்திருக்கிறது” என்று கூறும் ஆனந்தி இயக்குநர் அதியனுடன் பணியாற்றியதை பற்றிக் கூறினார். “அதியன் சாரை தோழர் என்றுதான் அழைப்பேன். அவர் போனில் கதை சொல்லும் போது புரியவில்லை.

ரஞ்சித் சார், மாரி சார் அதியன் தோழரை பற்றி நல்ல விஷயங்கள் சொன்னார்கள். அந்த நம்பிக்கையில் ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பின் போது வசனங்கள் கொடுக்கும் போது அதியன் தோழரா இப்படி எழுதியது என்று வியந்தேன். ரொமான்ஸ் எல்லாம் வசனங்களிலேயே கொண்டு வந்திருப்பார். அவரது திறமையை படப்பிடிப்பு தளங்களில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரிடம் எல்லாவற்றையும் பேசமுடிந்தது. எனக்குள் இருக்கும் சந்தேகங்களைச் சுதந்திரமாக அவரிடம் கேட்டு உரையாட  இடம் கிடைத்தது. படப்பிடிப்பு இடைவேளையிலோ அல்லது முடிந்த பின்போ அவர் கடந்து வந்த பாதை, அவர்களுடைய வாழ்க்கைமுறை, அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பது குறித்து நிறையபேசுவார்.

சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களைப் பேசுவார்.  அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இவர்கள் அனைவரும் புரட்சிகரமானவர்கள், எதைப் பேசினாலும் அதில் ஒரு அரசியல் கண்ணோட்டம் இருக்கும். இவரால் காதல் காட்சிகள் எடுக்க முடியுமா? அப்படி எடுத்தால்  எப்படி இருக்குமோ? நல்லா வருமா, எனக்கு இதில் பெரிய அளவில் ஸ்கோப் இருக்காது என்று நினைத்திருக்கிறேன். ஆனால் நான் நினைத்ததை எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டார் இயக்குநர். அவ்வளவு அழகா வந்திருக்கிறது படம். ஒவ்வொரு காட்சியும் கற்பனையா இல்லாமல் இயல்பான வாழ்க்கைக்குள் நுழைந்தது போல் இருந்தது. ஒரு நல்ல அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது” என்றார்.

“மக்களுக்கு அவசியமான, முக்கிய விஷயம் ஒன்றை, இயல்பான கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர்” என்று கூறும் ஆனந்தி, “ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் வன்மம், பொறாமை, பேராசை என பல குண்டுகள் உள்ளன. இவற்றை அழிக்க, தீர்வு சொல்லும் படம் இது. சின்ன கதாபாத்திரம், பெரிய கதாபாத்திரம் என்றில்லாமல் எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. ஆட்டிடியூட், ஈகோ இல்லாமல் ஒரு செட்டில் பார்ப்பது ரொம்ப கஷ்டம். ஆனால் அது இங்கில்லை. நிறைய இடங்களில், பல்வேறு விதமான லேண்ட்ஸ்கேப் ஷூட் பண்ணியிருக்காங்க. இதுவும் ஒரு குறிப்பிட்ட பட்ெஜட், நேரத்திற்குள்.

அந்த அளவிற்கு ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் நல்ல புரிதலுடன் வேலை பார்த்தாங்க. ஒரு நேர்மறையான குழுவில் வேலை பார்த்த திருப்தி இருந்தது” என்று கூறும் ஆனந்தி, தயாரிப்பு நிறுவனமான ‘நீலம்’ பற்றிப் பேசுகிறார். “நீலம் பா.ரஞ்சித் தயாரிப்பில் இரண்டாவது படம். அவர் தேர்ந்தெடுக்கும் கதையின் கருப்பொருள், இயக்குநர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள்… என எல்லோரும் ஏதோ ஒன்று புதிதாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ரஞ்சித் சாருடைய தயாரிப்பு என்றாலே ஒரு சுதந்திரம் இருக்கும். இங்கு எல்லோரும் அவர்களுடைய கருத்துகளைச் சொல்ல
முடியும்.

அந்த கருத்துகள் குறித்து விவாதிக்க முடியும். அந்த அளவிற்கு கருத்துரிமைக்கான சுதந்திரம் எனக்கு இருந்தது” என்றார். அலாவுதீனும் அற்புத கேமராவும், எங்கே அந்த வானம், இராவண கூட்டம் போன்ற படங்களோடு, இன்னும் பல படங்களில் நடித்து வரும் ஆனந்தி ‘‘தோழர் என்ற வார்த்தை அழகானது. இதற்கு முன் இதைக் கேட்டிருந்தாலும் இந்த செட்டிற்கு வந்த பின் தான் ‘காம்ரேட்’ சொல்லின் தமிழாக்கம் தான் தோழர் என்பது புரிந்தது” என்று கூறுகிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பெயின்டிங், ஸ்கெட்ச் பண்ணுவது, படிப்பது என தனது ஹாபியாக
வைத்திருக்கும் ஆனந்தி, ஒரு நடிகையாக தனது வேலையை எவ்வாறு பார்க்கிறார் என்பதைக் கூறும் போது, “நடிப்பது என்னுடைய வேலை.

அதை மிகவும் நேசித்து செய்வதால் எப்போதும் சந்தோஷமாக உணர்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரம் பண்ணும் போதும் மன திருப்தி கிடைக்க வேண்டும். நல்ல மக்களோடு பழகி இருக்கிறேன். அவர்களுக்கு ஒரு நல்ல கருத்தைக் கொண்டு போகிறோம் என்பதில் கிடைக்கும் நிறைவு வித்தியாசமாக இருக்கும். ஆன் ஸ்கிரீன் வேலைகளோடு, ஆஃப் ஸ்கிரீனிலும் வேலை பார்ப்பது எனக்குப் பிடிக்கும். மற்ற டெக்னீஷியன் வேலைகள் எல்லாம் தெரிந்து கொள்வதில் ரொம்பவே இஷ்டம். செட்டில் லைட்மேன், கேமரா டிப்பார்ட்மென்ட் ஆட்கள் வேலை பார்ப்பதைக் கவனிப்பேன். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். சொல்லவும் முடியாது ஒரு நாள் உதவி இயக்குநராகச் சேர்ந்து அடுத்து ஒரு படமும் கூட இயக்கலாம். அது அந்த நாளில்தான் தெரியும்” என்றார்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : companion ,
× RELATED ஐயப்பன் துணை இருப்பான்