திருமயம் அருகே சாலைப்பணி முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் எச்சரிக்கை பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருமயம்: திருமயம் அருகே சாலை பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் சாலை தடுப்புகள், ஊர் பெயர் பலகை, எச்சரிக்கை பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து காணப்பூர் வழியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லும் சுமார் 5 கிலோமீட்டர் சாலை உள்ளது. இது புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு முக்கிய சாலை ஆகும். இது ஒன்றிய சாலையாக இருந்த போது குண்டும் குழியுமாக மக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் மற்றும் தினகரன் நாளிதழ் வெளியிட்ட அடுத்தடுத்த செய்தியை தொடர்ந்து கடந்த ஆண்டு மாவட்ட நெடுஞ்சாலை ஆக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலை துறை மூலம் சாலையில் இருந்த சேதமடைந்த பாலங்கள் சரி செய்யப்பட்டு, சாலை புதுப்பிக்கப்பட்டது. மேலும் சாலை சந்திப்புகள், மக்கள் குடியிருக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு உள்ளது.

அதே சமயம் சாலை சந்திப்புகள் உள்ளதையும் வேகத்தடை மற்றும் சாலையோரம் உள்ள கிராமங்களை வாகன ஓட்டிகள் முன்னதாகவே அறியும் வகையில் பெயர் பலகை, எச்சரிக்கை பலகை வைக்க நெடுஞ்சாலைத்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும் சாலை வளைவுகளில் விபத்துகளை தடுக்கும் வண்ணம் சாலை தடுப்புகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் உள்ள கிராமங்களின் பெயர்கள் தெரியாமலும் சாலையில் உள்ள வேகத்தடை, சாலை வளைவுகள் தெரியாமலும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ராயவரத்தில் இருந்து காணப்பூர் வழியாக காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை, வேகத்தடை எச்சரிக்கை பலகை, சாலை தடுப்புகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: