திருப்பூரில் மாணவர்களுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கப்பட்ட புகாரில் சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்

திருப்பூர்: திருப்பூரில் மாணவர்களுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கப்பட்ட புகாரில் சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முட்டைகளை தரம்பார்த்து 3 நாட்களுக்குள் விநியோகிக்காதது விசாரணையில் தெரிய வந்ததால் திருப்பூர் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியை சேர்ந்த 57 பயனாளிகளுக்கு முட்டைகள் விநியோகம் செய்த போது அழுகிய முட்டைகள் இருந்ததாக செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நேரில் சென்று விசாரணை செய்யப்பட்டதில் முட்டைகளை தரம்பார்த்து 3 நாட்களுக்குள் விநியோகிக்காதது தெரியவந்துள்ளது. தற்போது கெட்டுப்போன 610 முட்டைகளுக்கு பதிலாக புதிதாக 610 முட்டைகள் மாற்றி தரப்பட்டு இன்று விடுபட்ட 61 மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரி என்பவர் பதிவேடு முறையாக பராமரிக்கவில்லை என்பதும் முட்டைகளை தரம் பார்த்து 3 நாட்களுக்குள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யவில்லை என்றும் கெட்டுப்போன முட்டைகளை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக குப்பை தொட்டியில் போட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கெட்டுப்போன முட்டைகளை விநியோகம் செய்திருந்தால் குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கும். எனவே இவரை தற்காலிக பணி நீக்கம் செய்து தற்போது மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories:

More