சூப்பர் ஸ்டாரின் அதிரடி அண்ணாத்த... 18 மணி நேரத்தில் 55 லட்சம் பார்வையாளர்களை கடந்த ட்ரெயிலர் :யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த டிரெய்லர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், ‘நீ யாருங்கிறது, நீ சேர்த்து வச்சிருக்கிற சொத்துலேயோ உன்னை சுத்தியிருக்கிறவங்க கிட்ட இருக்கிற பயத்திலோ இல்ல. நீ செய்யுற செயல்லேயும் நீ பேசுற பேச்சுலேயும் இருக்கு. இது வேதவாக்கு’ என ரஜினிகாந்த் பேசும் அதிரடி வசனத்துடன் ஆக்‌ஷன் காட்சி ஆரம்பிக்கிறது. தொடர்ந்து ரஜினி, சூரி, கீர்த்தி சுரேஷ், ரெடின் கிங்ஸ்லி, சத்யன் உள்ளிட்டோர் தோன்றும் காமெடி காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. இதைத் தொடர்ந்து ரஜினியுடன் நயன்தாரா தோன்றும் காட்சியும் ‘மாமோய்’ என குஷ்பு அழைப்பதும் ‘அத்தான்’ என மீனா அழைப்பதும் என நகைச்சுவையுடன் டிரெய்லர் களைகட்டுகிறது. ரஜினி, கீர்த்தி சுரேஷின் சென்டிமென்ட் ஷாட்கள் வர, தொடர்ந்து பிரகாஷ்ராஜ் இடம்பெறும் காட்சி வருகிறது.

ஜெகபதிபாபு, அபிமன்யு சிங் தோன்றும் மிரட்டல் வில்லத்தனமும் இதில் இடம்பெறுகிறது. பரபரப்பான ஆக்‌ஷனும் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி உத்வேகம் தரும் வகையில், ‘நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள புள்ளைக்கு இருந்துச்சுனா அந்த சாமி இறங்கி வந்து அவளுக்கு துணையா நிக்கும்’ என கூறும் காட்சியை பார்க்கலாம். சென்டிமென்ட், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த டிரெய்லர் அமைந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த டிரெய்லர், யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 18 மணி நேரத்தில் 55 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்ணாத்த டிரெய்லர் பார்த்துள்ளனர்.இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: