ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் தீவிரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை.! கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் பறிமுதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்.20ம் தேதி இரவு குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இதன் காரணமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீர் பாரம்முல்லா பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கெனவே பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்களை ஜம்மு காஷ்மீரில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று உள்ளூர் கடைக்காரரைக் கொலை செய்ய சென்றுகொண்டிருக்கும்போது பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் அவர் உயிரிழந்துள்ளார். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் அதற்கான குண்டுகள், ஒரு வெடி குண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர் ஜாவேத் ஆ வானி என்றும், அவர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இவர் பீகார் தொழிலாளர்களை கொன்ற குல்ஜார் எனும் தீவிரவாதிக்கு உதவியவர் என்றும் கூறப்படுகிறது.

Related Stories:

More