×

நடப்பு ஆண்டில் டான்சி நிறுவனம் ரூ100 கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்ய இலக்கு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று சென்னை கிண்டியில் உள்ள டான்சி தலைமை அலுவலக குழு கூட்ட அரங்கில் 10 மற்றும் 12ம் வகுப்பில்  அதிக மதிப்பெண்கள் பெற்ற டான்சி ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு விருது, ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ10,000, ரூ7500, ரூ6000 முறையே ஊக்கத் தொகையும், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடம் பிடித்த  மாணவ, மாணவிகளுக்கு ரூ7,500, ரூ5,000, ரூ6,000  முறையே வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, ‘‘1965ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் துவங்கப்பட்ட தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் தற்சமயம் 18 அலகுகளுடன் மாநிலம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மர, எஃகு அறைகலன்கள் பொருட்கள், உயர் மின் அழுத்த கோபுரங்கள், ஸ்பிரிட்டை மூலப் பொருளாக கொண்ட மருத்துவ பொருட்களான சர்ஜிகல் ஸ்பிரிட், டி-நேச்சர்ட் ஸ்பிரிட், டிஞ்சர் செட்ரிமைடு, பொவிடோன் அயோடின், ஸ்பிரிட்டை அடிப்படையாகக் கொண்ட தொழில் பொருட்களான காஸ்கெட் ஷெல்லாக், பிரென்ச் பாலிஷ், தின்னர் மற்றும் கிருமி நாசிகளான லைசால், பெனாயில், ஆழ்துளை கிணறு கைப்பம்புகள் மற்றும் இதர பொருட்களை தயாரித்து அளித்து வருகிறது.

அக்டோபர், 2021 வரை சுமார் ரூ60 கோடி வரை பணி ஆணைகள் பெறப்பட்டு உற்பத்தி நடந்து வருகிறது. மேலும், பள்ளி கல்வி துறையிடம் இருந்து ரூ15 கோடி, இந்திய மருத்துவ துறையில் ரூ5 கோடி, பழங்குடியினர் நலத்துறை ரூ4 கோடி என மொத்தம் ரூ24 கோடி மதிப்பில் பணி ஆணைகள் பெறப்பட்டு, நடப்பாண்டில் இந்நிறுவனம் சுமார் ரூ100 கோடி மதிப்பில் உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொள்ளும்’’ என்றார். நிகழ்ச்சியில் டான்சி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.விஜயகுமார், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், டான்சி பொது மேலாளர்  ஜெயபாரதி உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

Tags : Dancy ,Minister ,Thamo Anparasan , Dancy aims to manufacture and sell goods worth Rs 100 crore this year: Minister Thamo Anparasan
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...