×

அதிமுகவில் வலுக்கும் கோஷ்டி மோதல் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் என்ன தவறு?.. ஜே.சி.டி.பிரபாகர் கருத்தால் மீண்டும் பரபரப்பு

சென்னை: “அதிமுக வெற்றிபெற நாம் அனைவரும் பகையை மறந்து ஒன்றிணைய வேண்டும்” என்று சசிகலா தெரிவித்த. கருத்து பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும்.  அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள்” என பதில் அளித்தார். ஓபிஎஸ்சின் இந்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மற்றும் அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக மீண்டும் ஒரு சோதனையை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்தித்தபோது, கட்சி ஏன் பிளவுபட்டது என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். அதற்கு யார் காரணம், என்ன நடந்தது என்பது குறித்து தொண்டர்களும் அறிவார்கள், மக்களும் அறிவார்கள். அதிலே ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கி நடத்தினார். அதற்கு பிறகும் தியாக உள்ளத்தோடு அதிமுக கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றும், தொண்டர்கள் பிளவுபட்டு விடக்கூடாது, ஏன் இந்த இயக்கம் சிதைந்துவிடக்கூடாது, சின்னாபின்னமாகி விடக்கூடாது, எனவே இணைத்து விடுகிறேன் என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் இணைந்தார். இதன்மூலம் ஆட்சி நிலைத்தது, கட்சியும் நிலைத்தது.

ஆனால் இன்றைக்கு அதிமுக சார்பில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது பற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்விகளை பல்வேறு மேல்மட்ட தலைவர்களிடம் எழுப்புகிறபோது, குறிப்பாக எடப்பாடி பழனிசாமி சொன்ன பதிலை அனைவரும் அறிவார்கள். ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறபோது, தலைமை கழக நிர்வாகிகள் கூடித்தான் இதுபற்றி முடிவு எடுப்பார்கள் என்று சொன்னார். ஒரு கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றவர், ஜெயலலிதாவுடன் இருந்து அவரது அனுபவத்தை பெற்றவர், மற்ற தலைவர்களுடன் நெருக்கமாக பழகியவர் ஒரு கேள்வியை நிருபர்கள் கேட்கிறபோது, அதை உதாசீனப்படுத்துவதோ, யாரை பற்றி கேள்வி கேட்கிறார்களோ அவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதோ ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறியாத ஒன்று.

அவர் சொல்ல விரும்பியதெல்லாம், சசிகலாவை சேர்ப்பதும், சேர்க்காமல் இருப்பதும் என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. அதிமுகவின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் அனைவரும் ஒன்று கூடிதான் முடிவு எடுப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லியதில் என்ன தவறு இருக்கிறது? பேட்டியில் அவர் அப்போது, சசிகலாவை சேர்க்க வேண்டும் என்றோ, அவருக்கு பொறுப்பு தர வேண்டும் என்றோ, எப்படி அவரை பயன்படுத்த வேண்டும் என்றோ அவர் கூறவில்லை. அதிமுக கட்சி தொண்டர்களுடைய கட்சி.

இந்த கட்சியில் எந்த குடும்பமும் ஆதிக்கம் செய்யக்கூடாது என்று ஒருமுறை வலியுறுத்தி நிருபர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசி இருக்கிறார். அதிமுக கட்சி எந்த ஒரு தனிப்பட்ட தலைவரின் கட்சியும் அல்ல. கே.பி.முனுசாமி இரண்டு நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில் ஒரு சில வார்த்தைகள் ஒரு தரப்பினரை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளதாக தென் மாவட்டங்களில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : OBS ,Sasikala ,DJ ,Prabakar , What is wrong with the OBS 'view of reinstating Sasikala in the AIADMK factional clash? .. JCD Prabhakar
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி